சீன பாதுகாப்பு அமைச்சர் இலங்கை வருகிறார்

சீன பாதுகாப்பு அமைச்சர் லியங் குஆன்கிலி இன் தலைமையிலான உயர்மட்ட பாதுகாப்பு குழுவொன்று நாளை  உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து நாட்கள் தங்கியிருக்கும் இந்த உயர் மட்ட பாதுகாப்பு குழுவினர், சப்புகஸ்கந்த பாதுகாப்பு அதிகாரிகள் கல்லூரி, பனாகொட இராணுவ முகாம், மற்றும் காலி ஹம்பாந்தோட்டை பிரதேசங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு படைத்தரப்பினருக்காக விசேடமாக நிர்மாணிக்கப்படவுள்ள வீட்டுத் திட்டங்களுக்காக 10 கோடி அமெரிக்க டொலர்களை வழங்க சீனா முன் வந்துள்ளது.

கொழும்பு பாதுகாப்பு பயிற்சி நிலையத்தை நவீன மயப்படுத்தவும், காவல்துறையைச் சேர்ந்த பிள்ளைகளின் நலன்புரி சேவைகளுக்காகவும் 15 லட்சம் அமெரிக்க டொலர்களை வழங்கவும் சீனா முன் வந்துள்ளது.

இலங்கை இராணுவ தளபதி ஜகத் ஜயசூரிய கடந்த ஜூன் மாதம் சீனாவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த போது, இலங்கை பாதுகாப்புத் தரப்பிற்கு அதிக அளவிலான ஒத்துழைப்பை வழங்க சீன அரசாங்கம் உறுதியளித்திருந்தது.

இந்த நிலையிலேயே, சீன பாதுகாப்பு அமைச்சரினது விஜயம் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் சில நாட்களில் வெளிநாட்டு ராஜதந்திரிகள் இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கண்டியில், மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசியினை பெற்றதன் பின்னர், அவர் செய்தியாளர் மத்தியில் உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார்.

இதற்கு அமைய தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான, அமெரிக்காவின் உதவி ராஜாங்க செயலாளர் ரொபேட் ஓ பிளேக், எதிர்வரும் இரண்டு வாரங்களில் இலங்கை வரவுள்ளார்.

இது தவிர, பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா விரைவில் இலங்கை வரவுள்ளார்.

அத்துடன், ரஷ்யாவைச் சேர்ந்த உயர்மட்ட ராஜதந்திர பிரதிநிதிகளும் இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply