விடுதலைப் புலிகளின் கட்டளைத் தளபதி பானு காயமடைந்தார்?
விடுதலைப் புலிகளின் கட்டளைத் தளபதிகளில் ஒருவரான பானு உடையார்கட்டுப் பகுதியில் நடைபெற்ற எறிகணைத் தாக்குதல்களில் காயமடைந்திருப்பதாக ‘த ஐலண்ட்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
பிரான்ஸ்சில் வசிக்கும் பானுவின் சகோதரி ஒருவர் அங்கு இந்தத் தகவலை வெளியிட்டிருப்பதாக ஐலண்ட் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் மோட்டார் தாக்குதல் பிரிவின் தலைவரான பானு, 2000ம் ஆண்டு ஆனையிறவைக் கைப்பற்றிய புலிகளின் தாக்குதலில் முக்கிய பங்கு வகித்தவர் என்பதுடன், ஆனையிறவில் புலிகளின் கொடியையும் அவரே ஏற்றிவைத்தார்.
1984ம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தவரான பானு, புலிகளின் தலைவர் பிரபாகரனின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவர் என்றும், புலிகளின் பல முக்கிய தாக்குதல்களில் அவர் பிரதான பங்கு வகித்திருந்தார் என்றும் ‘த ஐலண்ட்’ தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
முன்னாள் ஈரோஸ் அமைப்பின் தலைவரும், பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராகவும் இருந்த வே.பாலகுமார் அண்மையில் உடையார்கட்டுப் பிரதேசத்தில் எறிகணைத் தாக்குதலுக்குள்ளாகி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக முன்னதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும், பானு காயமடைந்தாரா என்பது குறித்து புலிகள் தரப்பிலிருந்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply