மாலைதீவுகளின் முன்னாள் ஜனாதிபதி பதவி விலகியமைக்கு சதிப்புரட்சி காரணமல்ல
மாலைதீவுகளின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் ஆறு மாதங்களுக்கு முன்னர் சதிப்புரட்சி மூலமாகத்தான் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்று எழுந்த குற்றச்சாட்டுக்களில் உண்மை எதுவும் இல்லை என்று காமன்வெல்த் என்ற பொதுநலவாய நாடுகள் அமைப்பின் அனுசரணையிலான விசாரணை ஆணையம் அறிவித்திருக்கிறது.
அனேகமாக மாலைதீவுப் பிரஜைகளை உள்ளடக்கிய இந்த ஆணைக்குழு, நஷீட் தாமாக விரும்பித்தான் பதவிவிலகினார் என்று கூறியுள்ளது.
ஆனால் அவர் பதவியிலிருந்து விலகிய சந்தர்ப்பத்தில் நாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்திருந்ததாகவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியிருக்கிறது.
கடந்த ஆறு மாதங்களாக விசாரணைகளை நடத்திவந்த இந்த ஆணையத்தின் இறுதி அறிக்கை, சீர்திருத்தவாதியான முன்னாள் அதிபர் மொஹமட் நஷீட்டுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
தான் துப்பாக்கி முனையில்தான் பதவியிலிருந்து அகற்றப்பட்டதாக கூறிய மொஹமட் நஷீட், பின்னர் ‘துப்பாக்கி முனை’ என்பதை தான் பலவந்தமாகவே பதவி நீக்கப்பட்டதாக கூறுவதற்குப் பயன்படுத்திய ஓர் உவமை வார்த்தை என்று தெரிவித்திருந்தார்.
தான் சதிப்புரட்சி மூலம் பலவந்தப்படுத்தித்தான் ஆட்சியிலிருந்து அனுப்பப்பட்டதாக அவர் தொடர்ந்தும் கூறிவந்தார்.
ஆனால் இவரது இந்தக் கூற்றை விசாரணை ஆணைக்குழு நிராகரித்துவிட்டது.
கிட்டத்தட்ட 300 சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவுசெய்துள்ள விசாரணைக் குழுவினர் முன்னாள் அதிபர் நஷீட் அச்சுறுத்தப்படவில்லை, ஆயுதம் கொண்டோ ஆயுதம் இல்லாமலோ பலவந்தப்படுத்தபடவுமில்லை, சதிமுயற்சி எதுவும் நடக்கவுமில்லை. அவர் விரும்பித்தான் பதவி விலகினார் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
ஆனால் அவ்வேளையில் நாட்டின் நிலைமை மிக மோசமாகத்தான் இருந்தது என்பதை அந்த அறிக்கை மறுக்கவில்லை.
கடந்த பெப்ரவரியில் நடந்த பொலிசாரின் அக்கிரமங்கள் குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்றும், அவர்கள் கட்டுக்கடங்காது செயற்பட்டுள்ளார்கள், நாட்டு மக்கள் சட்டம், ஆட்சி மீது நம்பிக்கை இழந்திருந்தார்கள் என்று ஆணைக்குழு கூறுகிறது.
4 ஆண்டுகளுக்கு முன்னர்தான் ஜனநாயக முறைப்படியான தேர்தல்மூலம் நஷீட்டை மாலைதீவுகள் தேர்ந்தெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து கருத்துவெளியிட்டுள்ள தற்போது ஆட்சியிலிருக்கும் புதிய அதிபர் மொஹமட் வாஹீட், விசாரணை முடிவுகள் மகிழ்ச்சியளிப்பதாகவும் இனி அடுத்த ஆண்டு ஜூலையில் நடக்கும் தேர்தலில் அக்கறை செலுத்த வேண்டும் என்றும் பிபிசியிடம் கூறியுள்ளார்.
ஆட்சியில் இருப்பதற்கு தனக்கு உள்ள தகைமை பற்றி இனி பிரச்சனை இல்லை என்றும் அவர் மகிழ்ச்சியடைந்தார்.
இதேவேளைஇ தலைநகர் மாலேயில் நஷீட்டின் ஆதரவாளர்கள் ஆயிரணக்கணக்கில் கூடி பேரணி நடத்திவருகிறார்கள்.
அதேபோல மொஹமட் நஷீட்டும் தனது ஆதரவாளர்கள் அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply