பாதுகாப்பு பிரதேசத்தை உறுதிப்படுத்துங்கள்! – பான் கீ மூன்
வன்னியில் மோதல்கள் நடைபெற்றுவரும் பகுதிகளில் சிக்கியுள்ள மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கான பாதுகாப்பான பிரதேசத்தை அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் உறுதிப்படுத்தவேண்டும் என்று ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
“முரண்பாட்டுப் பிரதேசங்களுக்குள் சிக்கியுள்ள பொதுமக்கள் பாதுகாப்பான பிரதேசம் என தாம் கருதும் (அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதி உட்பட்ட)பிரதேசங்களுக்குச் செல்வதை குறிப்பாக விடுதலைப் புலிகள் அனுமதிக்கவேண்டும் என்று ஐ.நா.செயலாளர் நாயகம் கோரிக்கை விடுக்கிறார்” என்று பான் கீ மூனின் ஊடக அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
“வன்னி மற்றும் ஏனைய முரண்பாட்டுப் பிரதேசங்களிலிருந்து வரும் பொதுமக்கள் சர்வதேச தராதரங்களுக்கு அமைவாக நடத்தப்படுவதை உறுதிப்படுத்தவேண்டும்” என்று இலங்கை அரசாங்கத்தைக் கோரியுள்ள ஐ.நா. செயலாளர் நாயகம், அவர்களுடைய நடமாடும் சுதந்திரம், அடிப்படை வசதிகள் உறுதிப்படுத்தப்படுவதுடன், மனிதாபிமான உதவி முகவர்கள் அவர்களைச் சென்று பார்வையிடும் வசதி செய்துகொடுக்கப்படவேண்டும் என்றும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
48 மணிநேர அவகாசம்
வன்னியில் சிக்கியுள்ள பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு அனுமதிக்குமாறு கோரி 48 மணிநேர அவகாசத்தை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வழங்கியுள்ளார்.
எனினும், இது உலகை ஏமாற்றும் செயல் என்று தெரிவித்துள்ள விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், பொதுமக்களை தாம் வலுக்கட்டாயமாக தடுத்து வைத்திருக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மற்றும் சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகள் மோதல்கள் நடைபெறும் பகுதிகளுக்கு வந்து சுயாதீனமாக மக்களிடம் நிலைமையைக் கேட்டறியவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்திருப்பதாக புலிகள் சார்பு இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் மக்கள் வெளியேறுவதற்கான பாதையை நடைமுறைச் சாத்தியமாக்குவதற்கு தமது சக்திக்குட்பட்ட அனைத்தையும் செய்யவேண்டும் என்றும், சர்வதேச சட்ட விதிமுறைகளுக்கு அமைவாக அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என்றும் ஐ.நா. செயலாளர் நாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.
‘சிறுவர்களைக் காப்பாற்றுங்கள்!’
மோதல்களில் சிக்கியுள்ள சிறுவர்கள் அதிகளவில் காயமடைந்துள்ளனர் என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகத் தெரிவித்துள்ள யுனிசெஃப் அமைப்பு, அரசாங்கமும், புலிகளும் சிறுவர்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முன்னதாகக் கோரிக்கை விடுத்திருந்தது.
“தம்முடையதல்லாத ஒரு முரண்பாட்டின் சுமைகளைச் சிறுவர்கள் சுமக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். பல ஆயிரக்கணக்கான சிறுவர்கள் இவ்வாறு கடுமையான முரண்பாட்டுக்குச் சிக்குண்டிருப்பது குறித்து நாம் மிகுந்த கவலையடைந்துள்ளோம்” என்று யுனிசெஃப் அமைப்பின் தெற்காசியப் பிராந்தியப் பணிப்பாளர் டானியல் டூல் தெரிவித்துள்ளார்.
மோதல்களில் காயமடைவதற்கும் அப்பால், சிறுவர்கள் போதிய சுகாதார வசதிகள், போசாக்குணவு, தூய நீர் மற்றும் கழிவகற்றல் வசதிகள் அற்ற சூழலில் வாழ்ந்து வருவதாகவும் டானியல் டூல் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மனிதாபிமான போர்நிறுத்தத்துக்கு மறுப்பு
இதேவேளை, மோதல்களில் சிக்கியுள்ள பொதுமக்களைக் காப்பாற்றும் வகையில் மனிதாபிமானப் போர்நிறுத்தம் செய்துகொள்ளப்படவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா, தென்னாபிரிக்க காங்கிரஸ் ஆகியன விடுத்த கோரிக்கையை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நிராகரித்துள்ளார்.
போர்நிறுத்தம் புலிகள் தம்மை மீள ஒழுங்குபடுத்த வாய்ப்பு வழங்கியதாக அமைந்துவிடும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச குறப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply