தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடுகளிலேயே தங்கியிருக்கின்றார்கள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது தேர்தல் தொகுதிகளிலன்றி வெளிநாடுகளிலேயே தங்கியிருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று குற்றஞ்சாட்டியுள்ளது.
 
லண்டனில் தங்கியிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பிரசாரங்களில் ஈடுபட்டிரு வருவதாகவும் சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.ஜெயனந்தமூர்த்தி, பா.அரியனேந்திரன், தங்கேஸ்வரி, பத்மினி சிதம்பரநாதன் மற்றும் செல்வராஜா கஜேந்திரன், விநோ நோகராதலிங்கம் ஆகியோர் லண்டனில் தங்கியிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் தமது தேர்தல் தொகுதிகளின்றி வெளிநாடுகளிலேயே கூடுதலான பிரசாரங்களில் கலந்துகொள்வதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் 16 நாடுகளுக்கு விஜயம் செய்துள்ளபோதும், கடந்த நான்கு வருடங்களாகத் தனது தேர்தல் தொகுதிக்குச் செல்லவில்லையென சண்டேடைம்ஸ் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

எனினும், அனுபவம்வாய்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா மற்றும் துரைரட்ணசிங்கம் ஆகியோர் தமது தேர்தல் தொகுதிகளான திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் தங்கியிருந்து கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக டைம்ஸ் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

வடக்கை மீட்கும் இராணுவ நடவடிக்கைகள் பூர்த்தியடைந்ததும் அங்கு உருவாக்கப்படவிருக்கும் அரசியல் நிர்வாகத்தில் அனுபவம்வாய்ந்த இந்த அரசியல்வாதிகளை உள்வாங்குவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அந்தப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply