மன்னார் முஸ்லிம் மக்களினது வீடுகள் தீ வைத்து எரிப்பு
இலங்கையின் வடமேற்கே மன்னார் முசலி பிரதேசத்தைச் சேர்ந்த மறிச்சுக்கட்டி மரைக்கார் தீவில் வசித்து வருகின்ற முஸ்லிம் குடும்பங்களின் குடியிருப்புக்கள் திங்கட்கிழமை இரவு சேதப்படுத்தப்பட்டுள்ளதாக ஊர் மக்கள் தெரிவித்திருக்கின்றார்கள். இந்தச் சம்பவத்தில் கடற்படையினரே சம்பந்தப்பட்டிருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
இரவு 7 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 21 வீடுகளைக் கடற்படையினர் கழற்றி தம்முடன் எடுத்துச் சென்றிருப்பதாகவும், 8 வீடுகள் எரிக்கப்பட்டிருப்பதாகவும் ஊர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
தாங்கள் பூர்வீகமாகக் குடியிருந்து வந்த இந்தக் கிராமத்தில் பெரும்பகுதியைக் கடற்படையினர் எடுத்துக் கொண்டது போக மிஞ்சியுள்ள சிறிய நிலப்பகுதியிலேயே தாங்கள் குடியேறி வாழ்ந்து வருகையிலேயே தமது குடியிருப்புக்கள் சேதப்படுத்தப்பட்டிருப்பதாக ஊர் முக்கியஸ்தராகிய மஃமுத் தௌபீக் தெரிவித்தார்.
மறிச்சுக்கட்டி மரைக்கார்தீவுக்குச் சென்று நிலைமைகளை நேரில் அவதானித்துத் திரும்பியுள்ள வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஹேமந்த அதிகாரி, இந்தச் சம்பவத்தில் 8 வீடுகளும் ஒரு பொது மண்டபமும் எரிக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். 4 வீடுகள் சேதப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்தச் சம்பவத்தில் கடற்படையினர் சம்பந்தப்பட்டதற்கான சாட்சியங்கள் கிடையாது என்றும் வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஹேமந்த அதிகாரி கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply