விடுதலைப் புலிகளின் பெருந்தொகையான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது
வடக்கே வன்னிப்பிரதேசத்தில் இலங்கை இராணுவத்தினர்
மேற்கொண்டுள்ள தொடர் இராணுவ மனிதாபிமான நடவடிக்கையின்போது இது வரையில் இல்லாத அளவில் விடுதலைப் புலிகளின் பெருந்தொகையான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.
60 மில்லி மீட்டர் தொடக்கம் 120 மில்லி மீட்டர் வரையிலான பல்வேறு வகையான பீரங்கிகள் உட்பட பல்வேறு ஆயுதங்களையும், வெடிப்பொருட்களையும், விடுதலைப் புலிகளின் 12 சடலங்களையும் விசுவமடு பகுதியி்ல் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணியின் முகாம் ஒன்றிலிருந்து இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாக இராணுவம் விபரம் வெளியிட்டிருக்கின்றது. இதுகுறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.
இராணுவத்தினர் மீது தாக்குதல் – விடுதலைப் புலிகள்
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு நகரத்தை நோக்கி முன்னேற்ற முயற்சியில் ஈடுபடுவதற்குத் தயாராக இருந்த இராணுவத்தினர் மீது ஊடறுத்து தாங்கள் நடத்திய தாக்குதல் ஒன்றில் பெரும் எண்ணிக்கையிலான இராணுவத்தினர் கொல்லப்பட்டிருப்பதாகவும், இராணுவத்தின் இரண்டு யுத்த டாங்கிகள் சேதப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தொடர்ந்து அந்தப் பகுதியில் இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சண்டைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.
எனினும் அந்தப் பகுதியில் இராணுவ டாங்கிகள் எதையும் தாங்கள் பயன்படுத்தவில்லை என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
இதற்கிடையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைகளில் மேல்சிகிச்சையை எதிர்நோக்கி காத்திருக்கும் நோயாளர்களை அரச கட்டுப்பாட்டுப் பிரதேசமாகிய வவுனியாவுக்குக் கொண்டு வருதவற்காக மோதலில் ஈடுபட்டுள்ள இருதரப்பிருடனும் சர்வதேச செஞ்சிலுவைக்குழு பேச்சுக்கள் நடத்தி வருவதாக அந்தக்குழுவின் தகவலதிகாரி சரசி விஜேரட்ண தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply