மீள்குடியேற்றத்தின் போது ஏற்பட்டுள்ள காணிப்பிரச்சினை தொடர்பில் முக்கிய தீர்மானம்
இலங்கையில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள குடும்பங்களுக்கான, மீள்குடியேற்றத்தின்போது ஏற்படுகின்ற காணி தொடர்பான பிரச்சினைகளில், காணிகளில் முதலில் குடியிருந்தவர்களுக்கே முதலிடம் கொடுத்து, தீர்வு காணப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. செவ்வாய்கிழமை வவுனியாவுக்கு விஜயம் செய்த, காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர், அசோகா பீரிஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அரச காணிகளில் நீண்டகாலமாக யாரேனும் குடியிருந்திருப்பார்களேயாளால், அவர்கள் தொடர்பான முழு விபரங்களையும் திரட்டியபின்னர், அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரதேச செயலாளர், கிராம சேவை அதிகாரி ஆகியோருடன் இணைந்து அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என அவர் குறியுள்ளார்.
அதன் அடிப்படையில் பொருத்தமான வகையில் அந்தக் காணிகளை அவர்களுக்கே வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளுக்குச் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
போரினால் இடம் பெயர்ந்து, சொந்த இடங்களில் மீண்டும் குடியேறுபவர்கள் வவுனியா மாவட்டத்தில் எதிர்நோக்கியுள்ள காணி பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்காக அவர் வவுனியாவுக்கு வருகை தந்திருந்தார்.
ஜனாதிபதியின் தலைமையில் அண்மையில் வவுனியாவில் நடைபெற்ற கூட்டத்தில் இனம் காணப்பட்ட வவனியா மாவட்டத்தின் காணிப் பிரச்சினைகள் குறித்து நேரடியாக அறிந்து தீர்வு காண்பதற்காகவே இன்றைய விஜயத்தைத் தான் மேற்கொண்டதாக அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இடம்பெயர்ந்துள்ள மக்களுடைய வயல்கள் மற்றும் தோட்டக்காணிகளில் பாதுகாப்புப் படையினர் விவசாய உற்பத்தியில் ஈடுபட்டிருப்பதாகப் பலரும் முறையிட்டிருக்கின்றார்களே என காணி அமைச்சின் செயலாளரிடம் கேட்டதற்கு, இந்தப் பிரச்சினை குறித்து ஏற்கனவே, அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.
இராணுவத்தினர் சம்பந்தப்பட்ட காணிப்பிரச்சினைகளில் அவர்களுடன் கலந்து பேச சுமுகமாக பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் எனவும் அசோகா பீரீஸ் தெரிவித்தார்.
சில வேளைகளில் இத்தகைய காணிகளில் சிறு சிறு மாற்றங்கள் செய்ய நேரிடலாம் என்றும் இருந்தாலும் முன்னர் குடியிருந்த மக்களுக்கே முதல் உரிமை கொடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இவ்வாறான இடங்களில் இராணுவத்தினருக்குத் தேவையான நிரந்தரக் கட்டிடங்கள் அமைக்கப்பட்டு, அவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாத நிலைமை இருக்குமானால், காணி உரிமையாளர்களாகிய குடும்பங்களுக்கு வேறிடத்தில் காணிகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply