தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தை ஆதரித்து செயற்பட வேண்டும்

தமிழ் தேசியக்கூட்டமைப்பு அடிப்படையற்ற தமிழீழ தேசத்துக்கான பிரசாரங்களைக் கைவிட்டு தேசிய நல்லிணக்கத்துக்காக அரசாங்கத்தை ஆதரித்து செயற்பட முன்வர வேண்டும். இது சர்வதேசத்துக்கு நற் செய்தியாக அமையும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

2008 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் விடுதலைப் புலிகளின் நேரடி அரசியல் செயற்பாட்டாளர்களாகவே கூட்டமைப்பினர் செயற்பட்டனர். ஜனநாயகத்தை ஏற்றுக்கொள்ளாது வன்முறைகள் ஊடாக தமது நோக்கங்களை அடைய புலிகள் முயற்சித்த போதிலும் அது தோல்வி கண்டுள்ளது. கூட்டமைப்பினரின் இத்தகைய முயற்சிகளை கிழக்கு தமிழர்களும் நிராகரித்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேற்கண்டவாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும் கூறுகையில்,

சுமார் 70 நாட்கள் மேற்கொண்ட கடுமையான போராட்டத்தின் பலனாக மூன்று மாகாணங்களிலும் அரசாங்கம் வெற்றி கொண்டுள்ளது. 2005 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரையில் நடைபெற்ற 10 தேர்தல்களிலும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தோல்வியினை தழுவிக் கொண்டுள்ளார். இது மற்றுமொரு உலக சாதனையாகும்.

எவ்வாறாயினும் அரசாங்கம் ஏனைய இரு மாகாணங்களை விட கிழக்கு மாகாணத்தில் அடைந்துள்ள வெற்றியானது வரலாற்று முக்கியமானதாகும். ஏனெனில் பெரும்பாலான முஸ்லிம்கள்இ தமிழர்கள் அரசாங்கத்தை ஆதரித்துள்ளனர். இதனை இனவாதம் பேசும் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

குறிப்பாக தமிழீழ தேசத்துக்கான 4 ஆம் கட்டப் போராக அறிவித்து கிழக்கு மகாண சபைத் தேர்தலில் களமிறங்கிய கூட்டமைப்பு தனது கொள்கைகளை தமிழ் சமூகத்தின் விடிவுக்காக மாற்றிக் கொள்ள வேண்டும்.

தமது பிரிவினைவாதக் கொள்கைகளைக் கைவிட்டு கிழக்கு மாகாணத்தில் அரசாங்கத்தின் ஆட்சிக்கு ஒத்துழைப்புக்களை வழங்க முன்வர வேண்டும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply