நிமலரூபன், நில்ருக்ஷன் பாணியில் சதீஸ்குமாரின் நிலையும் ஏற்பட அரசு பகீரத பிரேயத்தனம்
தமிழ் அரசியல் கைதி சுந்தரம் சதீஸ் அவர்களின் தற்போதைய நிலைமையை விளக்கி கொழும்பிலுள்ள ஜனநாயக மக்கள் முன்னணி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (14) இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவரும் மக்கள் கண்காணிப்புக்குழுவின் ஏற்பாட்டாளருமான மனோ கணேசன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும், மக்கள் கண்காணிப்புக்குழுவின் உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன், முன்னணியின் ஊடகச் செயலாளரும், கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சி. பாஸ்க்கரா, சுந்தரம் சதீஸ் அவர்களின் மனைவி கவிதா, கைதியின் தகப்பனார் சந்திப்பில் பங்குபற்றியிருந்தனர்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த மனோ கணேசன், நிமலரூபன், நில்ருக்ஷன் பாணியில் சதீஸ்குமாரின் நிலையும் ஏற்பட அரசு பகீரத பிரேயத்தனம் செய்து கொண்டிருக்கிறது. வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த பொழுது பூரண சுகம் பெறாத நிலையில் சொந்த மனைவிக்குக்கூட தெரியாமல் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து வசதிகளற்ற மகசின் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை எவ்விதத்திலும் நியாயப்படுத்தவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாது.
மகசின் சிறைச்சாலையில்கூட மனைவியை அருகில் சென்று பேசுவதற்குக் தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்படியான காட்டுமிராண்டித்தனமான செயல்கள் கண்டிக்கப்படவேண்டியதும், எவ்விதத்திலும் நியாயப்படுத்தமுடியாததொன்றாகும்.
பாரதூரமாக பாதிக்கப்பட்டுள்ள சதீசுக்கு குறைந்த பட்சம் மருத்துவக் காரணங்களுக்காக பிணை வழங்குவதற்கு அரசு ஆவன செய்யாமை மிகவும் வேதனையானதும், ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும்.
மேலும் இதுதொடர்பாக கருத்து தெரிவித்து சுரேஸ் பிரேமச்சந்திரன், கொலைக் குற்றம் சாட்டப்பட்ட அரசியல் வாதிக்கு சிங்கப்பூரில் சிகிச்சையளிக்கப்படுகின்ற நிலையில் தமிழ் அரசியல் கைதிக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பூரண சிகிச்சையளிக்க தயங்குவதுடன், மேலும் வசதிகள் குறைந்த மகசின் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை மிகக் கொடூரமான செயல் என தெரிவித்ததுடன், இவருக்கு வைத்திய காரணங்களுக்காக பிணை வழங்கப்படுமிடத்து இவருக்கு வெளியில் சிகிச்சை செய்ய பலதொண்டு நிறுவனங்களும், மக்களும் காத்திருக்கின்றார்கள் என்று தெரிவித்தார்.
இறுதியாக சட்ட ஆலோசகர்கள், வழக்கறிஞர்களுடன் தொடர்பு கொண்டு மருத்துவக் காரணங்களைக் சுட்டிக்காட்டி தமிழ் அரசியல் கைதி சுந்தரம் சதீஸ் அவர்களை பிணையில் எடுப்பதற்கு ஆவன செய்ய மக்கள் கண்காணிப்புக்குழுவின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply