வடக்கு கிழக்கு மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்- அரசு வாக்குறுதி

இலங்கையில் மனித உரிமைகள் சூழல் பற்றி மதிப்பிடுவதற்காகவும், படிப்பினைக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழுவின் பரிந்துரைகள் இலங்கையில் செயல்படுத்தப்படும் விதத்தில் தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்குவதற்காகவும் ஐநா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகத்தைச் சேர்ந்த இரண்டு பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளனர்.

ஐநா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகத்தில் ஆசிய பசிபிக், மத்திய கிழக்கு, வடக்கு ஆப்பிரிக்கா ஆகிய பிராந்தியங்களை கவனிக்கும் பிரிவுக்குத் தலைவரான ஹன்னி மெகல்லியும், அந்த உயர்ஸ்தானிகத்தில் சட்டத்தின் மாட்சிமை மற்றும் ஜனநாயகம் ஆகிய விஷயங்களை கவனிக்கும் பிரிவினைச் சேர்ந்த ஆஸ்கர் செல்டர்ஸும் இலங்கை வந்துள்ளனர்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதியின் மூத்த ஆலோசகருமான பசில் ராஜபக்ஷவை இந்த அதிகாரிகள் சந்தித்துள்ளனர்.

இந்தச் சந்திப்பு தொடர்பில் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் வடக்கிலும் கிழக்கிலும் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என இலங்கை அரசு வாக்குறுதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று தசாப்தகால யுத்தத்துக்குப் பின்னர் இப்பகுதி மக்கள் சமாதானமான அமைதிகரமான வாழ்க்கையை அனுபவித்து வருகின்றனர் என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீள்குடியேற்றப்பட்ட மக்கள் புதிய வாழ்க்கையைத் தொடங்க உதவும் வகையில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுவதாகவும், அவர்கள் வாழ்வாதாரம் தேட உதவிகள் வழங்கப்படுவதாகவும் ஐநா மனித உரிமைகள் பிரதிநிதிகளிடம் அமைச்சர் பசில் தெரிவித்துள்ளார்.

படிப்பினைக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழு வழங்கிய பரிந்துரைகளை இலங்கை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ஐநா மனித உரிமைகள் மன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்தில், ஐநா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நவநீதம் பிள்ளையின் அலுவலகத்திடம் இருந்து தொழில்நுட்ப ஆலோசனைகளை இலங்கை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படிருந்தது.

ஐநா குழுவிடம் இருந்து தொழில்நுட்ப ஆலோசனை பெறுவதற்கு அவசியமில்லை என்று இலங்கை அரசு ஆரம்பத்தில் கூறினாலும், ஐநா குழு இலங்கை வருவதற்கு அரசு பின்னர் உடன்பட்டிருந்தது. இலங்கை மனித உரிமைகள் ஆணையகத் தலைவர் பேட்டி

மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும், சாட்சிகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்பது தொடர்பாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணையகத்திடம் வந்துள்ள முறைப்பாடுகள் பற்றி ஐநா அதிகாரிகள் கேட்டறிந்துள்ளனர்

“இலங்கைக்கு எதிராக சில ஆதாரமற்ற குற்றச்ச்சாட்டுகள் முன்வைக்கப்படும் நிலையில், மனித உரிமைகள் விஷயத்தில் இலங்கை கண்டுள்ள முன்னேற்றங்களை வெளியுலகுக்குத் தெரிவிக்க இது ஒரு நல்ல சந்தர்ப்பம். ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்க வேண்டிய அறிக்கைக்கு இந்த அதிகாரிகள் சேகரித்துப்போகும் தகவல்கள் உதவும்.” என இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர் டாக்டர் பிரதிபா மஹநாம ஹேவா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இந்த வருடம் ஜனவரிக்கும் ஆகஸ்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் 37 பேர் காணாமல் போயுள்ளது 19 பேர் வெள்ளை வான்களில் வந்தவர்களால் கொண்டுசெல்லப்பட்டுள்ளது போன்றவை தொடர்பில் தாங்கள் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக அவர் கூறினார்.

விசாரணைகள் இன்னும் முடிவடையாத நிலையில் யார் குற்றவாளி என்று எங்களால் கைகாட்டிச் சொல்ல முடியாது என்றும் விசாரணைகள் முடிந்த பின்னர் எல்லா விவரங்களும் வெளிவரும் என்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணையகத்தின் தலைவர் பிரதிபா மஹநாம ஹேவா குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply