மக்களின் ஜனநாயக தீர்வை முஸ்லிம் காங்கிரஸ் புறந்தள்ளி விட்டது
தீர்வு தமிழ் மக்களுக்கு மாத்திரம் அல்ல முஸ்லிம் மக்களுக்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டும். இறைமை மக்களுக்கு உரியது. இது தலைவருக்கோ அல்லது கட்சிக்கோ மாத்திரம் உரியது அல்ல. ஜனநாயம் இறைமையின் ஒரு அம்சம்.
இது மக்களுக்கு உரியது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பற்றி ஒரு நோக்கு என்ற தலைப்பில் திருகோணமலையில் புதன்கிழமை 26.09.2012 மாலை கூட்டமொன்று நடைபெற்றது.
இதில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சி.தண்டாயுதபாணி, கு.நாகேஸ்வரன், ஜெ.ஜனார்த்தன் ஆகியோருடன் வேட்பாளர்களான, மருத்துவர் திருமதி இந்திராணி தர்மராஜா, வெ.சுரேஷ், சி.பளீர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட தலைவர் க.துரைரெட்ணசிங்கம் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இங்கு சம்பந்தன் மேலும் உரையாற்றுகையில்,
வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவது எமக்கு அவமானம் எனத் தெரிவித்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அரசுக்கு எதிராக மரச் சின்னத்தில் போட்டியிடுவதே பெருமை என தேர்தல் காலத்தில் முஸ்லிம் மக்கள் முன்னிலையில் தெரிவித்தார்.
அரசாங்கத்தை விமர்சித்து தேர்தலில் போட்டியிட்டதால் மக்களின் வாக்கு கணிசமாக அவருக்கு கிடைத்தது. தற்போது ஜனநாயக முடிவுக்கு மாறாக அரசுடன் இணைந்து ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது.
மக்களின் ஜனநாயக தீர்வு புறந்தள்ளப்பட்டு முஸ்லிம் மக்களின் இறைமை உதாசீனம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஹக்கீம் முஸ்லிம் மக்களுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply