கிறிஸ்மஸ் தீவில் உள்ள இலங்கையர்கள் பெரும் குழப்பத்தில்
அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் உள்ள இலங்கையர் பலர் நவுறு தீவுக்குச் செல்வதா அல்லது நாடு திரும்புவதா என்ற குழப்பத்தில் இருப்பதாக அங்கிருந்து நாடுதிரும்பிய குடும்பஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவிற்கான பயணம் சட்ட விரோத பயணமாக இருந்தாலும் தனது குடும்ப பொருளாதரத்தை முன்னேற்றும் நோக்கத்துடனே அந்நாட்டிற்கு செல்ல தாம் முயன்றதாக நாடு திரும்பிய நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் பிபிசி தமிழோசைக்கு தெரிவித்தார்.நவுறு தீவில் எவ்வளவு காலம் தங்க வைக்கப்படுவார்கள் என்று காலவரையறை எதுவும் அவுஸ்திரேலியா அதிகாரிகளினால் உறுதியாக தெரிவிக்கப்படாததை அடுத்தே சுய விருப்பத்தின் பேரில் தான் நாடுதிரும்பியதாகவும் அவர் கூறுகின்றார்.
கடந்த ஆகஸ்ட் 23 ம் திகதி தான் உட்பட 66 பேர் இலங்கையிலிருந்து கடல் வழியாக புறப்பட்டு செப்டெம்பர் 10 ம் திகதி கொக்கோஸ் தீவை சென்றடைந்து, நாடு திரும்பும்வரை கிறிஸ்மஸ் தீவில் தங்க வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கின்றார்.
கிறிஸ்மஸ் தீவில் தங்கியுள்ள ஏனைய இலங்கையரைப் பொறுத்த வரை நவுறு தீவிற்கு செல்வதா? அல்லது நாடு திரும்புவதா ? என குழப்ப நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை ஆஸ்திரேலியாவில் சட்டவிரோத புகலிடம் கோருவது தொடர்பாக குறித்த புதிய நடை முறை அமுலுக்கு வந்தாலும் இலங்கையிலிருந்து கடல் வழியாக செல்லும் சட்ட விரோத பயணிகளின் எண்ணிக்கையும் குறையவில்லை.
தமது நாட்டிற்குள் சட்டவிரோதமாக புகலிடம் கோரி நுழைந்து கிறிஸ்மஸ்தீவை வந்தடையும் வெளிநாட்டவர்கள் தென் பசுபிக் கடற்பரப்பிலுள்ள நவுறு தீவில் தங்கவைத்து விசாரிக்கப்படுவார்கள் என கடந்த ஆகஸ்ட் மாதம் 13 ம் திகதி அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டது.
இத்தீர்மானம் அமுலுக்கு வந்த பின்னர் கிறிஸ்மஸ் தீவை சென்றடையும் வெளிநாட்டவர்களை நவுறு தீவிற்கு அனுப்பும் வேலைகளும் நடந்துவருகின்றன.
ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் இந்தப் புதிய நடைமுறை அறிவிக்கப்பட்ட பின்னர், கடந்த 22 ம் திகதி 18 பேரும் நேற்று சனிக்கிழமை 28 பேரும் என இதுவரை மொத்தம் 46 பேர் நாடு திரும்பியுள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் சிங்களவர்கள். சில தமிழர்களும் முஸ்லிம்களும் இவர்களில் அடங்குகின்றனர்.
இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா நோக்கி கடல்வழியாக செல்லமுயன்ற 2,608 பேர் கடந்த 9 மாதங்களில் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.
இவர்களில் ஆகக்கூடுதலானோர் (1024 பேர்) இந்த செப்டம்பர் மாதத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் மற்றும் கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை இலங்கை கடற்பரப்பில் மேலும் 36 பேர் இன்று ஞாயிற்றுக்கிழமை கிழக்கு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு சட்ட விரோதமான முறையில் புகலிடம் கோரிச் சென்ற மேலும் 28 பேர் சனிக்கிழமை தமது சுயவிருப்பத்தின் பேரில் நாடு திரும்பியிருந்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply