கொழும்பு கொம்பனித்தெரு அபிவிருத்திக்கு இடைக்காலத் தடை

கொழும்பு கொம்பனித்தெரு பிரதேசத்தில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேற்றிவிட்டு அப்பகுதியில் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டத்தை தற்காலிகமாக இடை நிறுத்திவைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தப் பிரதேசத்தில் உள்ள சுமார் 7 ஏக்கர் காணிப்பரப்பை இந்தியாவின் நிறுவனமொன்றுக்கு வழங்கி அரசாங்கம் அங்கு முன்னெடுக்கவுள்ள வேலைத்திட்டத்தால் தமது குடியிருப்புக்களை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி அப்பகுதி மக்கள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்படவுள்ள இந்தக் காணிகளில் தாம் பல பரம்பரைகளாக வாழ்ந்து வந்துள்ளதாக அந்த மக்கள் கூறுகின்றனர்.

அந்த மக்களிடம் தமது காணிகளுக்கான உறுதிப்பத்திரம் இருப்பதாக அவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் வாதிட்ட சட்டத்தரணி பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க சுட்டிக்காட்டினார்.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் இந்த நடவடிக்கை மூலம் அப்பகுதியில் வசிக்கும் 600 க்கும் அதிகமான குடியிருப்புக்கள் இடிக்கப்படும் என்றும் அதனால் 1000 க்கும் அதிகமான குடும்பங்கள் நிர்க்கதியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.

எனினும் குறித்த பகுதியில் வீடுகளை இழக்கும் மக்களுக்கு மாற்றுக் குடியிருப்புக்களை வழங்க நகர அபிவிருத்தி அதிகார சபை நீதிமன்றத்தில் தெரிவித்தது.

ஆனால் அரசாங்கம் அந்த மக்களுக்கு குடியிருப்புக்களை வழங்குவதற்கான உறுதியான வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கும் வரை அங்குள்ள காணிகளை சுவீகரிப்பதை நிறுத்தி வைக்குமாறு உச்ச நீதிமன்றம் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு உத்தரவிட்டதாக சட்டத்தரணி சேனசிங்க மேலும் குறிப்பிட்டார்.

இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணைகள் எதிர்வரும் 25 ஆம் திகதி நடக்கவுள்ளன. இதேவேளை குறித்த பிரதேசத்தில் வசிக்கும் மக்களின் நலன் கருதியே இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை நகர அபிவிருத்தி அதிகார சபையின் துணை இயக்குனர் பிரசாத் ரணவீர கூறினார்

மக்களால் தாமாகவோ அல்லது தமது அதிகார சபையாலோ குறித்த பிரதேசத்தின் அபிவிருத்திக்கான செலவை ஏற்க முடியாது என்பதால் இந்தியாவின் நிறுவனத்திடம் அபிவிருத்தி வேலையை ஒப்படைத்துள்ளதாகவும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் துணை இயக்குனர் மேலும் தெரிவித்தார்.

மூலம்ஃஆக்கம் : இணையத்தள செய்தி

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply