விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே போடுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் : இணைத்தலைமை நாடுகள்

இலங்கையின் வடக்கே போர் நடக்கும் பகுதிகளில், பொதுமக்களின் உயிர்ச் சேதங்களை தவிர்ப்பதற்காக, விடுதலைப் புலிகள் தங்களது ஆயுதங்களை கீழே போடுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று அமெரிக்கா, ஜப்பான், நோர்வே மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளன.

விடுதலைப் புலிகள் தங்களிடம் எஞ்சியிருக்கும் நிலப்பரப்பை, இழப்பதற்கு ஒருவேளை இன்னும் சிறிது காலமே இருக்கலாம் என்று கூறியுள்ள அந்த நாடுகள், இதற்கு மேலும் உயிரிழப்புகள் ஏற்படுவது பயனற்றது என்பதை விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை அரசு ஆகிய இரண்டு தரப்புமே உணர வேண்டும் என்றும் கூறியுள்ளன.

மோதலில் காயமடைந்தவர்கள் மற்றும் நோயாளிகளை போர் நடக்கும் பகுதிகளிலிருந்து அப்புறப்படுத்துவதற்கு உதவும் வகையில், ஒரு தற்காலிக போர் நிறுத்தத்தையும் இந்தக் குழு கோரியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள புதுக்குடியிருப்பு மருத்துவமனையின் மீது எறிகணை தாக்குதல்களை நடத்த வேண்டாம் என்று அவை கோரியுள்ளன.

பாதுகாப்பு பிரதேசமென அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குள்ளிருந்தோ அல்லது அப்பகுதிகளை நோக்கியோ துப்பாக்கி பிரயோகம் செய்ய வேண்டாமென டோக்கியோ இணைத் தலைமை நாடுகள் வேண்டுகோள் விடுத்திருக்கின்றன.

புலிகளுக்கும் அரசாங்கத்திற்குமே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. டோக்கியோ இணைத் தலைமை நாடுகள் இது தொடர்பாக நேற்று விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, இலங்கையின் வடக்கில் உள்ளூரில் இடம்பெயர்ந்துள்ளவர்களின் நிலை தொடர்பாக இணைத் தலைமை நாடுகள் கூடுதல் அக்கறை கொண்டுள்ளன.

அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்பு வலயத்தினுள் புலிகளோ அரச படைகளோ தாக்குதல் நடத்தக் கூடாது. அதே நேரம் நோயாளர்கள் சிகிச்சை பெற்றுவரும் ஆஸ்பத்திரி மீது தாக்குதல் நடத்தக் கூடாது.

சிவிலியன்கள் சிக்கியிருக்கும் பகுதிக்குள் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கும் இரு தரப்பும் அனுமதிக்க வேண்டும். அதேநேரம் அவசர சிகிச்சைக்கு உட்படுத்தப்படுபவர்களை வெளியேற்ற ஐ. சி. ஆர். சி. யுடன் ஒத்துழைக்க வேண்டும். சிவிலியன்களை சுதந்தி ரமாக நடமாட அனுமதிக்க வேண்டுமென்று புலிகளிடம் விடுக்கப்பட்ட சர்வதேசத்தின் முயற்சிகள் தோல்வியில் முடிந்திருக்கிறது. புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகள் இன்னும் கொஞ்சமே இருக்கின்றன.

புலிகளும் அரசாங்கமும் மேலும் உயிர் இழப்புக்கள் ஏற்படுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். மனிதத் துன்புறுத்தல்களையும் சிவிலியன்கள் பாதிக்கப்படுவதையும் தவிர்க்கும் வகையில் பின்வரும் நடைமுறைகளைப் பின்பற்ற இணைத் தலைமைகள் வேண்டுகோள் விடுகின்றன.

புலிகள் இயக்கம் சண்டையை முடிவுக்குக் கொண்டு வரவும் ஆயுதங்களைக் கீழே வைக்கவும் வன்முறையைக் கைவிட்டு இலங்கை அரசாங்கத்தின் பொது மன்னிப்பை ஏற்கும் வகையிலும் பொதுவான வழிமுறைகளை அரசாங்கத்துடன் ஆராய வேண்டும்.

அதே நேரம் அரசியல் தீர்வை அடை வதற்காக ஒரு அரசியல் கட்சியாக புலிகள் செயற்பட வேண்டும்.  நோயாளர்களையும் காயமடைந்தவர்களையும் வெளியேற்றும் வகையில் புலிகளும் அரசாங்கமும் தற்காலிக தாக்குதலற்ற காலப் பகுதியை பிரகடனம் செய்ய வேண்டும்.

இணைத் தலைமைகள் இலங்கை அரசுடனும் இந்தியா, ஐ. நா. சபை மற்றும் நாடுகளுடன் இணைந்து செயற்படும். இரண்டு விடயங்களில் அது உறுதிபூண்டுள்ளது.

மனிதா பிமான அமைப்புக்கள், ஐ. சி. ஆர். சி. , ஐ. நா. நிறுவன ங்கள் உள்ள முகாம்களில் இடம்பெயர்ந்தோர் மாற்றப்பட வேண்டும். சர்வதேச தரத்திற்கு அந்த முகாம்கள் பராமரி க்கப்பட வேண்டும். கூடிய விரைவில் சொந்த இடங்களுக்கு குடியமர்த்தப்பட வேண்டும்.

அரசியல் தீர்வுக்கான பேச்சு வார்த்தை மூலமே பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். இவ்வாறு இணைத் தலைமைகள் கேட்டுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply