ஒரு கட்சி, ஒரு நாடு என்ற தொனிப்பொருள் மீது எமக்கு நம்பிக்கை உள்ளது:கருணாஅம்மான்

கட்சியின் முக்கியஸ்தர்களுடன் இணைந்து தானும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்ளவிருப்பதாக, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்தார்.  
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கியஸ்தர்களான ஜெயம், மார்க்கன், இனிய பாரதி மற்றும் மங்களம் மாஸ்டர் ஆகியோருடன் தானும் இணைந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையை விரைவில் பெற்றுக்கொள்ளவிருப்பதாக அவர் கூறினார்.

இந்த விடயம் தொடர்பாக கிழக்கு மாகாணத்திலுள்ள கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் கடந்தவாரம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், தனது திட்டத்துக்கு அவர்கள் இணக்கம் தெரிவித்ததாகவும் கருணா அம்மான் கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினராக அடையாளம் காணப்படுவதில் எந்தவிதமான அர்த்தமும் இல்லையென கருணா கூறியுள்ளார்.

“கிழக்கைத் தளமாகக் கொண்டு சிறிய கட்சியொன்றை வைத்திருப்பதில் எந்தப் பயனும் இல்லை. நாம் அனைவரும் இலங்கையர்கள். அதனால் தேசிய மட்டத்தில் செயற்படும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களாக நாங்கள் இணையவேண்டும்” என்றார் அவர்.

இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக அந்த ஊடகத்திடம் தெரிவித்த கருணா அம்மான், எதிர்வரும் தேர்தல்களின் பின்னரே தனக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படுவதற்கான சாத்தியம் இருப்பதாகக் கூறினார்.

“திருகோணமலையிலிருந்து அம்பாறை வரை எமது கட்சி அலுவலகங்களின் பெயர்களை மாற்றுவோம். ஒரு கட்சி, ஒரு நாடு என்ற தொனிப்பொருள் மீது எமக்கு நம்பிக்கை உள்ளது. ஒரு வாரங்களில் நாங்கள் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களாக மாறிவிடுவோம்” என கருணா அம்மான் அந்த ஊடகத்திடம் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply