உள்விவகாரங்களில் நாம் தலையிட மாட்டோம் – சீனா

இலங்கையில் இனப்பிரச்சினையில் ஒரு அரசியல் தீர்வை எட்ட முயலுமாறு , இலங்கை அரசுக்கு சீனாவும் அழுத்தம் தரவேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கோரியிருக்கிறார்கள்.  சமீபத்தில் இலங்கைக்கான புதிய சீனத்தூதரை சந்தித்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு, வடக்கில் நடைபெற்று வரும் இராணுவ கட்டமைப்புத் திட்டங்கள் பல சீன உதவியுடன் நடைபெற்றுவருவதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் கூறுவதை, தூதருக்கு சுட்டிக்காட்டி, இலங்கையில் போர் முடிந்த வட மாகாணத்தில் இன்னும் சகஜ நிலை உருவாகவில்லை,

மக்கள் காணிகள் பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி பறிக்கப்பட்டிருக்கின்றன, அங்கு சுமார் ஒரு லட்சம் இராணுவத்தினர் இன்னும் நிலை கொண்டிருக்கிறார்கள், சாதாரண அரசியல் நடவடிக்கைகளைக் கூட முன்னெடுத்தால் அதில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் குழப்புகிறார்கள் என்பதையெல்லாம் முன்வைத்த்தாக, இந்த சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

ஆனால் சீனத் தூதர், இவையெல்லாம் இலங்கையின் உள்நாட்டு விஷயங்கள், இதில் சீனா தலையிடாது, இலங்கைக்கு உதவி வழங்கும் போது, இதில் சிங்களர், தமிழர் என்ற பாகுபாடு காட்டி உதவி வழங்குவதில்லை, நாட்டுக்கான உதவியை இலங்கை அரசிடம் வழங்குகிறது என்றும், இனப்பிரச்சினைக்கான தீர்வு விஷயத்தில், தமிழர்கள் இலங்கை அரசிடம் இதைப் பொறுமையாகப்பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறியதாகவும் சுரேஷ் தெரிவித்தார்.

இலங்கையில் நடந்து முடிந்த போரின் போது, இலங்கைக்கு இராணுவ ரீதியாக சீனா உதவி வழங்கியதாக செய்திகள் வந்த நிலையில், இலங்கையில் உள்ள சிறுபான்மைத் தமிழர்களுக்காக, இலங்கை அரசிடம் தனக்குள்ள உறவை சீனா விட்டுக்கொடுக்கும் என்று தனக்கு நம்பிக்கையில்லை என்றும் சுரேஷ் பிரேமசந்திரன் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply