யாழ் – தமிழகத்திற்கும் இடையே கப்பல் – விமான போக்குவரத்திற்கு கோரிக்கை
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்திற்கும் தமிழகத்திற்கும் இடையில் கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்துகளை ஆரம்பிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைக்கான இந்தியத் தூதரகத்தின் துணை அதிகாரி மகாலிங்கவிடம் யாழ் நகர வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள்.
இலங்கையில் யுத்தச் சூழல் தோன்றுவதற்கு முன்னர் தமிழகத்திற்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் பலாலி ஊடாக விமானப் போக்குவரத்தக்கள் நடைபெற்றிருந்தன.
எனினும் யுத்த மோதல்கள் ஆரம்பிக்கப்பட்டதையடுத்து பல வருடங்களாக இந்த போக்குவரத்து சேவை தடைபட்டிருக்கிறது.
தற்போது யுத்த நெருக்கடிகள் நீங்கி அமைதி நிலவுவதனால் இந்த போக்கு வரத்து வசதியை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கின்றது.
வருகின்ற ஜனவரி மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள சர்வதேச வர்த்தகக் கண்காட்சிக்கு இந்திய கைத்தொழில், உற்பத்திகள் மற்றும் வர்த்தகத்துறை சார்ந்தவர்களை அழைப்பது தொடர்பில் இந்தியத் தூதரக துணை அதிகாரி மகாலிங்கம் அவர்களின் தலைமையிலான அதிகாரிகளுக்கும், யாழ் வர்த்தகர்களுக்கும் இடையில் இடம்பெற்ற ஒரு கலந்துரையாடலின்போதே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கின்றது.
இந்தக் கோரிக்கை தொடர்பில் பரிசீலனை செய்யப்படும் என்று இலங்கைக்கான இந்திய துணை தூதரக அதிகாரி மகாலிங்கம் தெரிவித்ததாக இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட யாழ் வணிகர் கழகத் தலைவர் ரட்னலிங்கம் ஜெயசேகரன் தெரிவித்தார்.
காங்கேசன்துறை துறைமுகம் இந்தியாவின் பொறுப்பில் ஆறுகட்ட வேலைத்திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு வருவதாகவும், இதில் முதல் மூன்று கட்ட வேலைகளில் துறைமுகப் பகுதியில் யுத்த மோதல்களின்போது மூழ்கடிக்கப்பட்ட கப்பல்களைத் தாங்கள் மீட்டிருப்பதாகவும், மிகுதி வேலைகள் 2014 ஆம் ஆண்டில் முற்றுப் பெறும் என்றும்இ இந்தக் கலந்துரையாடலின்போது இந்தியத் தூதரக அதிகாரிகள் தம்மிடம் தெரிவித்திருப்பதாகவும் ஜெயசேகரன் கூறினார்.
இந்த வழியாக சிறிய ரக கப்பல்கள் தற்போது போக்குவரத்து செய்ய முடியும் என அவர்கள் சுட்டிக்காட்டியதாகவும் ஜெயசேகரன் குறிப்பிட்டார்.
இந்த விடயம் குறித்து ஜனவரி மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள வர்த்தகக் கண்காட்சிக்கு வருகை தரவுள்ள இலங்கை அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளிடம் தமிழகத்திற்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான கடல் மற்றும் வான்வழி போக்குவர்தது தொடர்பாக கோரிக்கை முன்வைக்கவுள்ளதாவும் யாழ் வணிகர் கழகத் தலைவர் ஜெயசேகரன் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply