ஆஸிக்கு ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கும் அகதிகள்
அவுஸ்திரேலியாவின் குவின்ஸ்லாந்து மாகாணத்தில் குடியேறியுள்ள வெளிநாட்டு அகதிகள் வந்த இடத்தில் நன்றாகப் பொருந்திப்போயுள்ளனர் என்று புதிய ஆய்வு ஒன்று காட்டுகிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து வந்துள்ள ஹசாராக்கள் உட்பட சுமார் ஆயிரம் வெளிநாட்டு அகதிகள், குவின்ஸ்லாந்து மாகாணத்தின் சிறிய நகரமான ராக்ஹாம்ப்டனில் வாழ்கின்றனர்.
இந்த அகதிகளில் பெரும்பாலானோர் வேலை பார்க்கின்றனர் என்றும், தங்களின் புதிய ஊருக்கு ஆக்கப்பூர்வமான பங்களிப்பு செய்கின்றனர் என்றும் அம்மாகாணத்தின் காலாச்சார பன்முகத்தன்மை மேம்பாட்டுக்கான அமைப்பு கூறுகிறது.
தஞ்சம் கோருவதற்காக படகுகள் மூலமாக அவுஸ்திரேலியா நோக்கி வருகின்ற மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேபோக, கேன்பெர்ராவில் உள்ள அரசாங்கம் அவசரகால நடவடிக்கையில் இறங்கியது.
இவர்களை அவுஸ்திரேலிய மண்ணில் கால்பதிக்க விடாமலேயே இவர்களது தஞ்சக் கோரிக்கை விண்ணப்பங்களைப் பரிசீலிக்க வேண்டும் என்பதற்காக நவுருவிலும் பப்புவா நியூகினியிலும் அகதி மையங்களை அது மீண்டும் திறந்துள்ளது.
மறுபக்கத்தில் அவுஸ்திரேலியாவுக்குள் வந்து குடியேறுகின்ற அகதிகளில் ஐந்தில் ஒருவர் சிட்னி போன்ற பெருநகரங்களில் வாழ்வதைத் தவிர்த்துவிடுகின்றனர்.
மாறாக பொதுவாக தொழிலாளர் பற்றாக்குறை காணப்படுகின்ற சிறு ஊர்களிலும் பிராந்திய மையங்களிலும் இவர்கள் சென்று தங்குகின்றனர்.
பிரிஸ்பேன் நகரத்து வடக்கே அமைந்திருக்கின்ற ராக்ஹாம்ப்டன், ஒரு லட்சத்துக்கு சற்றே கூடுதலான ஜனத்தொகை கொண்ட ஒரு சிறு நகரம்.
இந்த ஊரில் வாழ்க்கையை வெற்றிகரமாக அமைத்துக்கொள்ளும் ஒரு பெரிய அகதிகள் சமூகத்தைக் காண முடிகிறது.
இந்த ஊர் மக்கள் சாதாரணமாக எடுக்க விரும்பாத வேலைகளை இவர்கள் பார்த்து வருகின்றனர். இறைச்சி தொழிற்சாலைகள் போன்ற இடங்களில் இவர்கள் வேலை பார்க்கின்றனர்.
இங்கே ஊருக்குள் புதிதாக வந்து குடியேறுபவர்கள் தமது புதிய வாழ்க்கையில் பொருந்திப்போவதற்கு உதவிவருகின்ற குவீன்ஸ்லாந்து கலாச்சார பன்முகத்தன்மை மேம்பாட்டுச் சங்கம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், ராக்ஹாம்ப்டனால் அகதிகளுக்கும் அகதிகளால் ரொக்ஹாம்ப்டனுக்கும் ஏற்படக்கூடிய அனுபவம் அதிகம் ஆக்கப்பூர்வமானதாக அமைந்துள்ளதென்று கூறுகிறது.
இதேபோன்ற விஷயம்தான் அவுஸ்திரேலியாவில் மற்ற மற்ற இடங்களிலும் காணப்படுகிறது என்று தான் கருதுவதாக சங்கத்தில் தலைவர் வாரன் மெக்மில்லன் கூறுகிறார்.
ராக்ஹாம்ப்டன் வந்தபோது உள்ளூர் மக்கள் தங்களை சந்தேகத்துடன் தான் பார்த்தனர் என்று ஹசாரா பிரிவைச் சேர்ந்த ஆப்கன் குடியேறிகள் கூறுகின்றனர்.
ஆனால் வந்த இடத்தில் ஆக்கப்பூர்வமாகப் பங்காற்ற சமூகத்துடன் பொருந்திப்போக தாங்கள் காட்டிய உறுதிப்பாடு உள்ளூர் மக்களின் எண்ணங்களை மாற்றிவிட்டது.
தடைகளாகத் தெரிந்த பல விஷயங்களும் கரைந்துபோய்விட்டன என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனாலும் மொழிப் பிரச்சினைதான் தங்களுக்கு இருக்கின்ற மிகப் பெரிய சிரமம் என்று ராக்ஹாம்ப்டனில் அகதியாக வாழ்ந்துவரும் குலாம் ஹைதர் சேரத் கூறுகிறார்.
ராக்ஹாம்ப்டனைப் பொறுத்தவரை அகதிகளின் கதை ஒரு வெற்றிக் கதைதான் என்றாலும், அவுஸ்திரேலியாவின் அதிக ஜனத்தொகை கொண்ட மாகாணமான நியூசவுத் வேல்ஸில் அதிகள் குடியேறுவதில் பிரச்சினைகள் இருப்பதாக வேறொரு அறிக்கை ஒன்று அண்மையில் கூறியிருந்தது.
அகதிகளுக்கு வழங்கப்படுகின்ற சேவைகள் ஒழுங்காக ஒருங்கிணைக்கப்படவில்லை என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வாழ்விடம், வயிற்றுப் பிழைப்பு, கல்வி போன்றவற்றை தேடிக்கொள்வதில் அகதிகள் பலர் கஷ்டங்களை எதிர்கொள்கிறார்கள் என்று அதில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply