சீனாவின் உதவியுடன் யாழில் படை முகாம்கள் – மாவை குற்றச்சாட்டு
சீனாவின் உதவியுடன் யாழில் இராணுவத்தினர் மக்களின் நிலங்களில் படை முகாம்களை அமைத்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். யாழ். நல்லூர் பிரதேச சபைக்கு முன்னால் இன்று (22) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய மாவை சேனாதிராஜா இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
யாழில் இராணுவப் புலனாய்வாளர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச சபைத் தலைவர்களை இலக்குவைத்து தாக்குதல் நடத்துகின்றனர்.
போர் முடிந்து 3 ஆண்டுகள் சென்ற நிலையிலும் தமிழ் மக்கள் இன்னமும் இராணுவத்தினரின் பிடியிலிருந்து விடுபட வில்லை. தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளை இராணுவத்தினர் சுவீகரிக்க, அதில் இராணுவ முகாம்களை அமைப்பதற்கு சீன அரசு உதவி வருகின்றது.
இவை தொடர்பாக ஜ.நாவில் முறையிடவுள்ளோம். இந்த நாட்டின் ஜனாதிபதி மஹிந்தவிடம் எமது மக்களின் நிலங்களை இராணுவம் ஆக்கிரமித்துள்ளமை தொடர்பாக எடுத்துக் கூறியுள்ளோம். ஆனால் அதனால் எந்த பலனும் கிடைக்கவில்லை.
இராணுவம் வட பகுதியில் நிரந்தரமாக இருப்பதற்கு முயற்சிக்கின்றது. எமது மக்கள் இன்னமும் மீளக்குடியமர்த்தப்படவில்லை. அவர்களது காணிகளில் இராணுவம் இருக்கின்றது.
யாழில் இராணுவ பிரசன்னம் முழுமையாக குறைக்கப்பட வேண்டும். எங்கள் நிலங்ளை இராணுவம் விட்டு வெளியேறாது விட்டால் நாங்கள் மீண்டும் வன்முறையாளர்களாக மாறவேண்டிய நிலையை அரசு ஏற்படுத்தும்.
எந்தவித அடிப்படை உரிமையுமில்லாமல் வாழும் தமிழ் மக்களுக்கு சர்வதேசம் கருணை காட்ட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply