இலங்கை அரசின் செயல் நாகரீகமற்றது – கலைஞர் கண்டனம்

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட இடத்தில் இலங்கை அரசு போர்‌நினைவுச்சின்னம் மற்றம் அருங்காட்சியகம் அமைத்துள்ளதற்கு தி.மு.க தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில். இலங்கை அரசின் இத்தகைய செயல் நாகரீகமற்றதாக அமைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.  தமிழரின் கண்ணை குத்துவது போல் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழருடன் சமாதானம் எனக்கூறும் இலங்கையின் முயற்சிக்கு இந்த செயல் சமரசத்துக்கு உதவாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தாய்த் தமிழகத்தின் தவிப்பு! என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள கடித அறிக்கை:

இலங்கையிலே தமிழர்கள் பல ஆண்டுகளாகப் படுகின்ற எல்லையில்லாத – எண்ணற்ற துயரங்கள் குறித்து, நம்மைப் பற்றி யார் குறை சொன்ன போதிலும், மற்றவர்களின் பாராட்டுக்காக நாம் காத்திருக்காமல், “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்ற வகையில், 1956ஆம் ஆண்டு முதல் ஆட்சியிலே இருந்தாலும், இல்லாவிட்டாலும், தொடர்ந்து நம்மால் முடிந்த அளவிற்கு குரல் கொடுத்து வருகிறோம் என்பதை உண்மையை நேசிப்பவர்கள் உணர்ந்தே இருப்பார்கள்.

நமது பல்வேறு கோரிக்கைகளுக்கு இந்திய அரசு உதவிட முன் வருவதாக உறுதி கூறிய போதிலும், உலக நாடுகளின் மத்தியில் நடுநிலை நாடுகளில் ஒன்று இந்தியா என்ற பெயரைத் தக்க வைத்துக் கொள்வதற் காகவாவது, சிலவற்றில் விட்டுக் கொடுத்துப் போகிறதோ இந்திய அரசு என்று சிலர் சந்தேகம் கொள்ளக் கூடிய அளவிலேதான் செயல்படுகிறது.

உதாரணமாக இலங்கைத் தமிழர்களைக் கொல்வதற்குக் காரணமாக இருக்கும் இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவிலே பயிற்சி அளிக்கக் கூடாது என்பதுதான் தமிழகத்திலே உணர்வுள்ள தமிழர்களின் கோரிக்கை, வேண்டுகோள்.

அந்த வேண்டுகோளை இந்திய அரசிடம் நாம் பல முறை விடுத்துள்ளோம். ஆனால் சிங்கள அரசின் அமைச்சரே நம்மிடம் சவால் விடுகின்ற அளவிற்கு, இலங்கை ராணுவத்திற்கு இந்தியாவிலே பயிற்சி அளிக்கச் செய்தே தீருவோம், முடிந்தால் தமிழகத்திலே உள்ளவர்கள் தடுத்துப் பார்க்கட்டும் என்கிறார்.

இந்திய அரசும் சிங்கள அமைச்சருக்கு நேரடியாகப் பதில் சொல்ல முன் வரவில்லை. இந்தியாவிலே இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி அளிக்க மாட்டோம் என்று இந்திய அரசின் சார்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்க அவர்களால் இயலவில்லை. இலங்கையில் படுகொலைக்கு ஆளான பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களும், இந்தியர்களும் தான் என்று ஏற்றுக் கொள்ள இந்திய அரசு இன்னமும் தயாராக இல்லைபோலும்!

இந்தியாவின் சலுகைகளைப் பெற்றுக் கொள்ளும் சிங்கள அரசு, மறைமுகமாகவோ அல்லது தெரிந்தும் தெரியாமலோ சீனாவின் உதவியை, பாகிஸ்தானின் துணையை தொடர்ந்து பெற்றுக் கொண்டுதான் உள்ளது.

எந்த அளவிற்குச் சிங்கள அரசு இலங்கைத் தமிழர்களுக்கு விரோதமாகச் செயல்படுகிறது என்பதற்கு மற்றுமோர் எடுத்துக்காட்டாக 22-10-2012 “இந்து” நாளிதழில் முதல் பக்கத்தில் ஒரு கட்டுரையை பிரபல பத்திரிகையாளர்கள் நிருபமா சுப்ரமணியனும், ஆர்.கே. ராதாகிருஷ்ணனும் எழுதியிருக்கிறார்கள். அந்தக் கட்டுரைக்கான தலைப்பே, “விடுதலைப் புலிகள் இறுதியாக போரிட்ட இடத்திற்கு அருகிலேயே – தமிழர்களை வெறுப்பேற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வெற்றி நினைவுச் சின்னம்” என்பதாகும். அதிலே உள்ள சில செய்திகள் வருமாறு :-

“இலங்கையில் வடக்குப் பகுதியின் மையத்தில் – 2009ஆம் ஆண்டு நடந்த உச்சக்கட்டப் போரில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட ரத்தம் தோய்ந்த பூமிக்கு அருகில் – அந்தப் போரில் இலங்கை அரசு பெற்ற வெற்றியை உணர்த்திடும் வகையில் ஒரு நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டு போரின் போது கொடுமையான நிகழ்ச்சிகள் நடந்த இடத்தில் கருங்கல் குன்று ஒன்றின் மீது இலங்கை ராணுவத்தின் ராணுவ வீரர் ஒருவர் முகத்தில் பெருமகிழ்ச்சியோடும், பெருமிதத்தோடும் ஒரு கையில் துப்பாக்கி ஏந்தியபடி – மற்றொரு கையில் இலங்கையின் தேசியக் கொடியை ஏந்தியபடி சிலை ஒன்று பொறிக்கப் பட்டுள்ளது. அந்த இடத்தின் ஒவ்வொரு மூலையிலும் கருங்கல்லால் செதுக்கப்பட்ட இலங்கை அரசின் தேசிய விலங்கான “சிங்கம்” நிறுவப்பட்டுள்ளது. இந்தப் போர் நினைவுச் சின்னத்திற்கு அருகில், போர் அருங்காட்சியகம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டையும் பார்ப்பதற்காக சிங்களச் சுற்றுலா பயணியர் நாள்தோறும் வந்து சென்ற வண்ணம் உள்ளனர். போர் அருங்காட்சி யகத்தில் விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றிய துப்பாக்கி உள்ளிட்ட போர் ஆயுதங்கள், படகுகள் போன்றவை காட்சிப் பொருள்களாக வைக்கப் பட்டுள்ளன. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தங்கியிருந்த மறைவிடமும், கடல் புலிகள் பயிற்சிக்காகப் பயன்படுத்திய நீச்சல் குளமும் காட்சிப் பொருள்களாக ஆகியிருக்கின்றன. நீர் மூழ்கிக் கப்பல்கள், விடுதலைப் புலிகள் கைப்பற்றிய ஜோர்டான் நாட்டுக் கப்பல் போன்றவையும் அங்கே காட்சி அளிக்கின்றன.

புதுக் குடியிருப்பு சந்திப்பிலிருந்தே போர் நினைவுச் சின்னத்திற்கு போவதற்கு ராணுவத் தினர் தாங்களே பயணிகளை வழிகாட்டி அழைத்துச் செல்கின்றனர். இந்தச் சந்திப்பிலிருந்து 4.5 கிலோ மீட்டர் தொலைவில் முல்லைத் தீவுக்குச் செல்லும் சாலையில், போர் அருங்காட்சியகத்தைப் பற்றிய அறிவிப்புப் பலகை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த நினைவுச் சின்னத்திற்கும், போர் அருங்காட்சியகத்திற்கும் சென்றால், சிங்கள ராணுவ வீரர்களே ஒவ்வொன்றைப் பற்றிய விளக்கத்தையும், பின்னணியையும் சிங்கள மொழியிலே விவரிக்கிறார்கள். சில காட்சிப் பொருள்கள்,

ஒரு கூடத்திலும்; சில பொருள்கள் ஓர் அறையிலும்; மற்றவை திறந்த வெளியிலும் வைக்கப்பட்டுள்ளதாம். நினைவுச் சின்னத்திற்கு அருகில் உள்ள பெட்டிக்கடையை நடத்தும் சிங்கள ராணுவ வீரர் ஒருவர், நாள்தோறும் 500 முதல் 700 பேர் அங்கு வருவதாகவும், வார இறுதியில் 2000 பேர் வருவதாகவும் தெரிவித்தார்.

250 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து நினைவுச் சின்னத்தைப் பார்க்க வந்திருந்த சிங்களக் கல்லூரி மாணவர் ஒருவர், “எங்களுடைய ராணுவத்தைப் பற்றி நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். அதனாலே தான் நாங்கள் இங்கு வந்திருக்கிறோம்” என்றாராம்.

போர் நினைவு சின்னத்திலிருந்து முல்லைத் தீவு வரையில் உள்ள சாலையின் இருமருங்கிலும் போரின் காரணமாக இடம் பெயர்ந்த தமிழர்கள் அவசரம் அவசரமாக விட்டுச் சென்ற துணிமணிகள், பாத்திரப் பண்டங்கள் போன்ற அனைத்தும் கீழே தாறுமாறாக இன்னமும் இறைந்து கிடக்கின்றனவாம்.

இந்தப் போர் நினைவுச் சின்னம் தமிழர்களின் கண்களில் விரலை விட்டுக் குத்துகின்ற அளவில் வேண்டுமென்றே திட்டமிட்டு அமைக்கப்பட்டுள்ளதாம்.

இப்படிச் சொன்னவர், போரின் போது பெரிதும் பாதிக்கப்பட்ட ஒரு தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் தன்னுடைய தந்தையை சிறையிலிருந்து விடுவிப்பதற்கு நிறைய பணத்தைச் செலவு செய்ய வேண்டியிருந்ததாம். “எவ்வளவோ தியாகங்களைச் செய்தும் கூட, தமிழர்களாகிய நாங்கள் எங்கிருக்கிறோம் என்றே தெரியாத நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்” என்று அவர் கண்ணீரோடு புலம்பினார்.

போரில் பலியாகி, அழிந்து போன அப்பாவித் தமிழர்களுக்கு எந்த நினைவுச் சின்னமும் அங்கே கிடையாது. ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் போரின் போது கொல்லப்பட்டதையே இலங்கை அரசு ஒப்புக் கொள்ளத் தயாராக இல்லை.

போர் நினைவுச் சின்னமும், போர் அருங்காட்சியகமும் இலங்கை அரசின் நாகரிகமற்ற செயல். இலங்கை அரசு மேற்கொண்டு வருவதாகச் சொல்லிக் கொள்ளும் சமாதான முயற்சிக்கு, இந்தச் சின்னங்கள் எந்த வகையிலும் உதவிகரமாக இல்லை. இலங்கையின் வடக்குப் பகுதியில் சிங்கள ராணுவம் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் இன்னமும் இருந்து வருகிறது

என்பதற்கு அடையாளம்தான், இந்தப் போர் நினைவுச் சின்னமும், அருங்காட்சியகமும் ஆகும். இது கண்டு போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவித் தமிழர்கள் அனைவரும் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளார்கள். இலங்கை ராணுவத்தின் 19 பிரிவுகளில், 14 பிரிவுகள் வடக்குப் பகுதியில் மட்டும் இருந்து வருகின்றன.

ராணுவ முகாம்கள் அனைத்தும் “கண்டோன்மென்ட்” பகுதிகளாக மாற்றப்பட்டு அங்கே ராணுவ வீரர்கள் தமது குடும்பங்களோடு குடியேறு வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழர்கள் வாழ்ந்து வரும் பகுதிகள் இப்படி சிங்களர்களின் ஆக்கிர மிப்புக்கு உள்ளாவது கண்டு, தமிழர்கள் கவலை மிகக்கொண்டு கண்ணீர் சிந்துகின்றனர்.

புதுக்குடியிருப்பு – முல்லைத் தீவு – ஏ.9 நெடுஞ்சாலை போன்றவற்றில் காணப்படு வதைப் போல இலங்கை ராணுவத்தின் நடமாட்டம் யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் வெளிப்படையாகத் தெரியவில்லை. யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் இருந்த பல்லாயிரக்கணக்கான தமிழ்க் குடும்பங்கள் பலாளி விமான தளத்திற்கு அருகிலே உள்ள “கடும் கண்காணிப்புப் பகுதி”க்கு இடம் பெயர வைக்கப்பட்டுள்ளார்கள். அகதிகள் முகாம்களில் வாடிக் கொண்டிருக்கும் இந்தத் தமிழர்கள் என்றாவது ஒரு நாள் தங்களுடைய சொந்த இடத்திற்குத்

திரும்ப மாட்டோமா என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குச் சொந்தமான நிலங்களில் இலங்கை ராணுவத்தினர் விவசாயம் செய்து காய்கறிகள் போன்றவற்றை விளைவித்து, பலனடைந்து பரவசப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்துத் தமிழர்கள் குமுறுகின்றனர். யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவுக்குச் செல்லப் பயன்படும் ஏ.9 நெடுஞ்சாலை முழுதும் புத்தவிகாரங்கள் புதியதாக முளைத்திருக்கின்றன.

இலங்கை ராணுவத்தினரால் நடத்தப்படும் ஓட்டல்களும், கடைகளும் வழிநெடுகத் தோன்றியிருக்கின்றன. , எந்த அளவிற்கு ராஜபக்ஷே தலைமையிலான இலங்கை அரசு, இன்னமும் தமிழர்களை அவமானப்படுத்தி அடக்குவது

என்ற எண்ணத்தோடு; விடுதலைப் புலிகள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து முப்பதாண்டு களுக்கு மேலாக போரிட்ட இடத்திலே – அப்பாவித் தமிழர்கள் கால்நடைகளைப் போல வேட்டையாடப்பட்ட இடத்திலே – தங்கள் வெற்றியை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்ற அளவிற்கு நினைவுச் சின்னம் அமைத்து, அவற்றை அன்றாடம் நூற்றுக்கணக்கான சிங்களவர்கள் வந்து பார்த்துப் பரவசப்படு கிறார்கள் என்பதையெல்லாம் படிக்கும்போதே நம்முடைய நெஞ்சம் பதறுகிறது என்றால், அந்தக் கொடுமையை அங்கே அன்றாடம் காணுகின்ற ஈழத் தமிழர்களின் மனம் என்ன பாடுபடும்? இப்படிப்பட்ட செயல்கள் எல்லாம் அங்கேயுள்ள தமிழர்களை ஒற்றுமைப்படுத்தி வாழச் செய்யும் முயற்சிகள்தானா?

உலக நாடுகள் ஒருபோதும் அங்கீகரிக்க ஒப்புக் கொள்ள முடியாத போர்க் குற்றங்கள் அனைத்தையும் மனசாட்சி உறுத்தல் சிறிதுமின்றிப் புரிந்து விட்டு; ஐ.நா. போன்ற சர்வதேச மன்றங்கள் கொஞ்சங்கூடச் சகித்துக் கொள்ளவியலாத மனித உரிமை மீறல்களை எல்லையில்லாத அளவுக்குச் செய்து விட்டு; மனித மனமோ – மனித நேயமோ சிறுதுளியுமின்றி மிகப் பெரிய இனப் படுகொலையை நிறைவேற்றிவிட்டு; பல்லாயிரக்கணக்கான தமிழ் இளம் பெண்டிரை விதவையராக்கி விட்டு; நீண்ட நெடிய வரலாறும், பண்பாட்டுப் பாரம்பரியமும் கொண்ட தமிழ் தேசிய இனத்தை தரணியெங்கும் தெருக்களிலே அலைய வைத்து விட்டு; போரில் வெற்றி பெற்று விட்டதாகக் கருதிக் கொண்டு, போலிப் பூரிப்போடு, போர் நினைவுச் சின்னம் எழுப்பியிருக்கிறது “சிங்களப் பேரினவாதம்”!

ஈழத் தமிழர்களின் தியாக பூமியில் சிங்களர்கள் எழுப்பியுள்ள இந்த நினைவுச் சின்னம், உலகத் தமிழர்களின் நெஞ்சங்களிலெல்லாம் நெருப்பைக் கொட்டும் என்று தெரிந்தே, வேண்டுமென்றே அவர்களின் உள்ளங்களை யெல்லாம் நோகச் செய்ய வேண்டுமென்ற நோக்கத்தோடு இந்த நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை.

இலங்கையிலே ஒற்றுமையும் அமைதியும் ஏற்பட வேண்டுமென்று பெரிதும் விரும்புகின்ற ஐ.நா. மன்றம் போன்ற சர்வதேச நிறுவனங்கள் இந்த உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் கடந்த மாதம் நாம் நடத்திய “டெசோ” மாநாட்டிலே இந்தக் கருத்துக்களை யெல்லாம் உள்ளடக்கித்தான் பதினான்கு தீர்மானங்களை நிறைவேற்றினோம்.

நமது “டெசோ” மாநாட்டில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட அந்தத் தீர்மானங்களைத் தான் இந்த மாதக் கடைசியிலே நமது கழகப் பொருளாளர் தம்பி மு.க. ஸ்டாலினும், பாராளுமன்றக் கழகக் குழுவின் தலைவர் தம்பி டி.ஆர். பாலுவும் எடுத்துச் சென்று ஐ.நா. சபையிலே ஒப்படைக்க விருக்கிறார்கள்.

இதற்குப் பிறகாவது, இலங்கைத் தமிழர்களுக்கு விடிவு காலம் பிறக்காதா, அவர்களின் நல்வாழ்வுக்காக நாளும் நாளும் ஏங்கிக் கொண்டிருக்கும் உலகத் தமிழர்களின் துயரம் நீங்காதா என்ற ஏக்கத்தோடுதான் தாய்த்தமிழகம் தவித்துக் கொண்டிருக்கின்றது!

இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் மு.கருணாநிதி.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply