திவிநெகும சட்டமூலம் குறித்த ஆட்சேபனைகளை சமர்ப்பிக்குமாறு உத்தரவு

வாழ்வின் எழுச்சி (திவிநெகும) சட்டமூலத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பிலான எழுத்து மூலமான ஆட்சேபனைகளை இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முடியுமென உயர்நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. திவிநெகும சட்டமூலத்திற்கு ஆதரவாகவும் ஆட்சேபித்தும் தாக்கல் செய்யப்பட்ட 14 மனுக்கள் மீதான விசாரணைகள் கடந்த இரண்டு தினங்களாக உயர் நீதிமன்றத்தில் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா தலைமையிலான மூன்று நீதியரசர்கள் கொண்ட குழு முன்னிலையில் நடைபெற்றது.

இந்த மனுக்கள் மீதான இறுதி விசாரணை நேற்று இறுதியாக உயர் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

திவிநெகும சட்டமூலம் மாகாண சபைகளில் நிறைவேற்றப்படாத பட்சத்தில் அதனை நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்று சிரேஷ்ட அரச சட்டத்தரணி உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

அவரது வாதத்தை மறுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சேபனை மனு சார்பில் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், மாகாணசபைகளுக்கு கையளிக்காமல் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றிக்கொள்ள முடியுமாயின் சகல சட்டமூலங்களையும் மாகாண சபைகளுக்கு கையளிக்காது ஆளுநரின் அனுமதியைப் பெற்றுக்கொள்ளும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

இருதரப்பு வாதப் பிரதிவாதங்களையும் கவனத்திற்கொண்ட உயர்நீதிமன்றம், திவிநெகும சட்டமூலம் தொடர்பிலான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் சபாநாயகருக்கும் ஜனாதிபதிக்கும் அனுப்பி வைக்க வேண்டியிருப்பதால் மனுக்கள் மீதான எழுத்துமூலமான ஆட்சேபனைகளை இன்று சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply