கருணாநிதியை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுக்க விரும்புகிறேன் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
அரசியல் பிரச்சினைக்கு இராணுவ ரீதியான தீர்வு இல்லையென்ற நிலைப்பாட்டில் தெளிவாக இருப்பதாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்துக்கு மாத்திரமே இராணுவத் தீர்வு என அவர் கூறினார்.
இந்தியாவின் ‘த ஹின்டு’ பத்திரிகைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு இனப்பிரச்சினைக்குத் தீர்வை முன்வைப்பதில் காலதாமதம் ஏற்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசியல் தீர்வு மற்றும் சமாதான முன்னெடுப்புக்களுக்கான முழுப் பொறுப்பையும் தான் எடுத்துக்கொள்வதாகக் கூறினார்.
“எமது இராணுவ நடவடிக்கைகள் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நேரடியானவை. ஆயுதங்களைக் கைவிட்டு, சரணடைந்து ஜனநாயக அரசியல் செயற்பாடுகளில் கலந்துகொள்ளும் இறுதிக் கட்டத்தில் விடுதலைப் புலிகள் உள்ளனர்” என ஜனாதிபதி மீண்டும் தெரிவித்திருந்தார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கைகள் தமிழ் மக்களுக்கு எதிராகவோ அல்லது அவர்களைப் பாதிக்கும் வகையிலோ முன்னெடுக்கப்படவில்லையெனத் தனது செவ்வியில் குறிப்பிட்ட மஹிந்த ராஜபக்ஷ, மோதல்களால் மக்கள் இடம்பெயர்வதைத் தடுப்பதற்கான சூழ்நிலையைத் தோற்றுவிப்பதற்கே தாம் முயற்சிப்பதாகவும் கூறினார். மோதல்களால் பாதிக்கப்படும் ஒவ்வொரு தமிழ் மக்களுக்கும் மறுவாழ்வளிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்தியாவுக்குச் சென்ற தனது விசேட பிரதிநிதி பசில் ராஜபக்ஷ, புதுடில்லியில் நடத்திய பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமைந்திருப்பது குறித்து மகிழ்ச்சியைத் தெரிவித்த மஹிந்த ராஜபக்ஷ, வடக்கில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு 800 மெற்றிக்தொன் உணவுப் பொருள்களை வழங்க இந்தியா முன்வந்திருப்பதைப் பாராட்டினார்.
“கருணாநிதி இந்தியாவிலுள்ள மிகவும் சிரேஷ்ட அரசியல்வாதி. பிரிக்கப்படாத இலங்கைக்குள் அரசியல் தீர்வு முன்வைக்கப்படவேண்டுமென்ற யோசனை வரவேற்கப்படவேண்டியது. கருணாநிதியை இலங்கைக்கு வருமாறு இந்திய அரசாங்கத்தின் ஊடாக அழைப்பு விடுக்க விரும்புகிறேன்” என இலங்கை ஜனாதிபதி தனது செவ்வியில் கூறினார்.
அரசியல் ரீதியான தீர்வொன்று விரைவில் முன்வைக்கப்படுமெனவும், அந்தத் தீர்வு இலங்கையிலுள்ள அனைத்து தமிழ் மக்கள் மற்றும் சர்வதேச சமூகத்தாலும் ஏற்றுக்கொள்ளப்படுமெனவும் த ஹின்டு பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply