ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் எட்டாவது வரவு – செலவு திட்டம்

2013 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட பிரேரணை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் இன்றைய தினம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரவு செலவுத் திட்டத்தின் சுருக்கம்

ஓட்டப் பந்தயத்திற்கென இறக்குமதி செய்யப்படும் அனைத்து வாகனங்களினதும் இறக்குமதி வரியை ரத்து செய்வதாக ஜனாதிபதி தனது வரவு செலவுத் திட்ட உரையில் தெரிவித்தார்.

அதேவேளை, ஊடகவியலாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கு கடந்த வரவு செலவுத் திட்டத்தில் வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு வட்டியில்லா கடன் வழங்கப்பட்டது.

எதிர்வரும் வருடம் அந்த திட்டத்திற்கு மேலும் 200 மில்லியன் ஒதுக்க ஜனாதிபதி யோசனை முன்வைத்துள்ளார்.

இலங்கையில் வெளிநாட்டவர்களுக்கு காணி விற்பனை செய்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் குத்தகை அடிப்படையில் வழங்கினால் 100க்கு நூறு சதவீத விலை அறவிடப்படும் எனவும் அவர் தமது திட்ட உரையில் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் முறையான சுகாதார சேவையை வழங்கவென 2013 நிதியாண்டில் 125 பில்லியன் ரூபா நிதி ஒதுக்க ஜனாதிபதி யோசனை முன்வைத்துள்ளார்.

இதுதவிர, இலவசக் கல்வித்துறை அபிவிருத்திக்கென 2013ம் வரவு செலவுத் திட்டத்தில் கடந்த வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை விட நூற்றுக்கு 15 வீதம் அதிகரிப்பதாக ஜனாதிபதி யோசனை முன்வைத்துள்ளார்.

அதன்படி கல்வித்துறைக்கு 306 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன் மொத்த தேசிய உற்பத்தியில் அது 4.1 வீத ஒதுக்கீடாகும்.

உள்நாட்டு பால் மற்றும் பால்மா உற்பத்தியை அதிகரிக்கவென இறக்குமதி செய்யப்படும் பால் மா வகைகளுக்கான வரி மேலும் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி தனது வரவு – செலவுத் திட்ட உரையில் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு பால் பண்ணையாளர்களின் பால் ஒரு லீட்டர் குறைந்தது 50 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட வேண்டும் என அவர் யோசனை முன்வைத்துள்ளார்.

அதேபோன்று கஷ்டப் பிரதேசங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு தற்போது வழங்கப்படுவதற்கு மேலதிகமாக பாடசாலை சீருடைய வழங்க அடுத்த வருட மத்தியில்  நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வரவு செலவு திட்ட உரையில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மாணவர்களுக்கு பாதணிகளும் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

இதுதவிர, விசேடமாக பாதுகாப்பு பிரிவுகளில் பணிபுரிபவர்களின் குடும்பங்களுக்கு 3 வருடங்கள் செல்லுபடியாகும் வகையில் நிவாரண வீட்டுக் கடன் வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அதற்கென 2013 வரவு – செலவு திட்டத்தில் 1000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பொலிஸ் துறையில் அபிவிருத்தி திட்டங்கள் செயற்படுத்த 950 மில்லியன் ரூபா ஒதுக்கவும், பொலிஸாருக்கான கொடுப்பனவு தொடர்பில் சம்பள சபை முன்வைத்த கோரிக்கையை அமுல்படுத்தவும் ஜனாதிபதி யோசனை முன்வைத்துள்ளார்.

வறிய மக்கள் வாழும் பிரதேசங்களில் விவசாய நடவடிக்கைகளுக்கு கடன் பெற்றுள்ள விவசாயிகள் செலுத்த வேண்டிய வட்டியை முழுமையாக ரத்து செய்வதாகவும் வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இந்த நிவாரணம் சென்றடையும் எனவும் ஜனாதிபதி தனது வரவு – செலவு திட்ட உரையில் தெரிவித்தார்.

அத்துடன் வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க 1000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கவும் ஜனாதிபதி யோசனை முன்வைத்துள்ளார்.

நெல்லுக்கான கட்டுப்பாட்டு விலை 32-35 ரூபா, மானிய உரம் 50 கிலோ கிராம் மூடை 450 ரூபா, கார்பன் உரத்திற்கான நேரடி, மறைமுக வரி நீக்கல் போன்ற யோசனைகளையும் ஜனாதிபதி விவசாயிகளுக்கென முன்வைத்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply