வன்னியில் அவதிப்படும் மக்களைக் காப்பாற்ற வலியுறுத்தி கொழும்பில் உண்ணாவிரதம்
வன்னியில் யுத்தப் பேரழிவுகளில் சிக்குண்டு உணவு,உறைவிடமின்றி உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கும் அப்பாவி பொது மக்களை காப்பாற்ற அனைத்து தரப்பினரும் முன்வரவேண்டுமென்று கோரி தலைநகர் கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப்போராட்டமொன்று நடைப்பெற்றது.
கொழும்பு பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லுரிக்கு முன்பாக நேற்றுக்காலை 8.30 மணிக்கு இந்த உண்ணா விரதப்போராட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சுதந்திர மாணவர் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த உண்ணாவிரதப்போராட்டத்தில் பெண்களே பெருமளவில் கலந்து கொண்டனர்.
யுத்த அவலத்திலிருந்து அப்பாவி மக்களை காப்பாற்று எமக்கு தேவை சமாதானம் யுத்தம் வேண்டாம் போன்ற பதாகைகளை ஏந்தியவாறு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச்செயலார் கலாநிதி ந.குமரகுருபரன் சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கம்(சிறீரெலோ) அமைப்பின் பொதுச்செயலாளர் உதயன், ஈழப்புரட்சிகர அமைப்பு(ஈரோஸ்)செயலாளார் பிரபா, ஈரோஸ் வடமாகாணப்பொறுப்பாளர் துஷ்யந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதே வேளை இந்த உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் அந்த வீதியூடாக ஊர்வலமாகச் சென்ற ஒரு குழுவினர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை குழப்ப முற்படட போதும் பொலிஸார் நிலைமையை விளக்கியதையடுத்து, குழப்பநிலைமை தவிர்க்கப்பட்டது.இதனையடுத்து, இந்த உண்ணா விரதப் போராட்டத்தை நேற்று நண் பகல் 2 மணியளவில் சிறீரெலோ அமைப்பின் பொதுச் செயலாளர் உதயன் கலந்து கொண்டு உரிய தரப்பினரின் கவனத்திற்கு உண்ணா விரதிகளின் கோரிக்கையை கொண்டு வருவதாக உறுதியளித்து உண்ணாவிரதத்தை முடித்துவைத்தார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply