14 வயது பாக்., சிறுமி மலாலாவுக்கு ஐ.நா., கவுரவம்
ஐ.நா. தன்னைப் போன்ற சிறுமிகளின் கல்வி உரிமைக்காக போராடியதற்காக தலிபான் பயங்கரவாதிகளால் சுடப்பட்ட பாக்., சிறுமி மலாலாவை கவுரவிக்கும் வகையில், நவம்பர் 10ம் தேதியை (இன்று) மலாலா நாளாக கொண்டாடுகிறது ஐ.நா.,
பாகிஸ்தானின் பழங்குடிகள் அதிகம் வசிக்கும் ஸ்வாட் மாகாணத்தின் மிங்கோரா நகரைச் சேர்ந்தவர் மலாலா யூசுப்சாய் (14). பாக்., பெண்கள் கல்வி உரிமைக்காக போராடிய இந்த சிறுமியை கடந்த மாதம் தலிபான் பயங்கரவாதிகள் சுட்டதில் அவர் படுகாயமடைந்தார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு வழங்கிய ஏர் ஆம்புலன்ஸ் மூலம் அவர் லண்டன் கொண்டு செல்லப்பட்டு, தற்போது உடல்நலம் தேறி வருகிறார்.
இந்நிலையில், மலாலாவை கவுரவிக்கும் வகையில், நவம்பர் 10ம் தேதி மலாலா நாளாக கொண்டாடப்படும் என ஐ.நா., பொதுச்செயலாளர் பான் கி மூனின் உலக கல்விக்கான சிறப்பு தூதரும், இங்கிலாந்து முன்னாள் பிரதமருமான கார்டன் பிரவுன் அறிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “இந்த நாள் 14 வயது மலாலா மற்றும் அவரைப்போன்ற 32 மில்லியன் கல்வி மறுக்கப்படும் பெண் குழந்தைகளை நினைவு கூறும் நாளாக கடைபிடிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
மலாலா குறித்து ஐ.நா., பொதுச்செயலாளர் பான் கி மூன் கூறுகையில், “மலாலா உலகில் உள்ள பெண் கல்வி உரிமைக்கான உலக அடையாளச்சின்னம். கல்வி ஒரு அடிப்படை உரிமை. மனித சமூகத்தின் வளர்ச்சி, சகிப்புத்தன்மை, குடியுரிமை ஆகியவற்றுக்கான பாதையாக கல்வி உள்ளது” என்றும் கூறியுள்ளார்.மேலும், மலாலா மற்றும் உலக நாடுகளிலுள்ள ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு கல்வியை உறுதி செய்ய உலக சமூகம் பாடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இதனிடையே மலாலாவுக்கு நோபல் பரிசு வழங்க உலக முழுவதிலுமிருந்து கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply