‘வெலிக்கடை சிறை வன்முறைகளை தவிர்த்திருக்கலாம்’
தாம் ஏற்கனவே முன்வைத்திருந்த பரிந்துரைகளை அதிகாரிகள் நடை முறைப்படுத்தியிருந்தால் வெலிக்கடை சிறைச்சாலை கலவரத்தை தவிர்த்திருக்கலாம் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆணையாளர் டீ.ஈ.ஆனந்தராஜா தெரிவித்துள்ளார்.மூன்று மாதங்களுக்கு முன்னர் வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்த தமது குழுவினர் சமர்பித்த அறிக்கை தொடர்பில் உரிய அதிகாரிகளிடமிருந்து பதில் நடவடிக்கைகளை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் இந்த கலவரம் நடந்தது துரதிஷ்டவசமானது என்றும் அவர் கூறினார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகளின் மனித உரிமைகள் தொடர்பில் எழுந்த கவலைகளை அடுத்து அங்கு சென்ற தமது குழுவினர் பல பரிந்துரைகளை சிறைத்துறை அதிகாரிகளுக்கு முன்வைத்திருந்ததாக ஆனந்தராஜா சுட்டிக்காட்டினார்.
‘ஆணைக்குழு விசாரணை நடத்தும்’
இந்த கலவரம் தொடர்பில் அடுத்துவரும் நாட்களில் மனித உரிமைகள் ஆணைக்குழு வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று விசாரணை நடத்தும் என்றும், அப்போது கலவரத்துக்கான காரணங்கள் மற்றும் அவற்றின் பின்னணி குறித்து ஆராய்ந்து அரசாங்கத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் என்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர்களில் ஒருவரான ஆனந்தராஜா தெரிவித்தார்.
இதேவேளை, கைதிகள் சிலர் சிறைச்சாலை மோதல்கள் முடிந்தபின்னர் சிறைக்கூடத்திலிருந்து கூட்டிச்செல்லப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டதாக சில கைதிகளின் உறவினர்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கள் பற்றி வினவியபோது, அதுபற்றி ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு கிடைக்கவில்லை என்றும் அதுபற்றியும் தமது விசாரணைக் குழு ஆராயும் என்றும் ஆணையாளர் டீ.ஈ. ஆனந்தராஜா தெரிவித்தார்.
இலங்கையில் சிறையில் நடக்கும் வன்முறைகளுக்கு சிறைச்சாலைகளில் காணப்படும் இடப்பற்றாக்குறையே முக்கிய காரணம் என்றும் அவர் கூறினார்.
சிறைகளில் போதைப்பொருள் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், மரண தண்டனைக் கைதிகள், ஆயுட்தண்டனைக் கைதிகள், தடுப்புக் காவல் கைதிகள் என பல தரப்பினரையும் ஒரே வளாகத்தில் வைத்திருப்பது ஆபத்தானது என்பதை அதிகாரிகளிடம் தமது ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வன்முறைகளை தவிர்ப்பதற்காக சிறைச்சாலைகளை நகரப்புறங்களுக்கு வெளியில் அமைக்கவேண்டும் என்று தான் கருதுவதாகவும் இலங்கையின் முன்னாள் பொலிஸ்மா அதிபரான, தற்போதைய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் ஆனந்தராஜா சுட்டிக்காட்டினார்.
வெலிக்கடை சிறைச்சாலையை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கான பரிந்துரைகளும் தமது ஆணைக்குழுவின் கவனத்துக்கு வந்திருப்பதையும் ஆனந்தராஜா உறுதிப்படுத்தினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply