ரூ.25 கோடியில் இலங்கை அகதிகளுக்கு 2500 புதிய வீடுகள்: ஜெயலலிதா உத்தரவு
தமிழகத்தில் அகதிகளாக வாழும் இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்ட சுமார் ரூ. 25 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அகதிகள் முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகள் தங்கி படிப்பதற்காக ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் கூடுதல் இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அகதிகள் முகாம்களிலிருந்து உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்குதல், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பயன் பெற வகை செய்தல், முகாம்களில் இயங்கி வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கூடுதல் மானியம் வழங்குதல், தமிழக அரசால் பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் வழங்கப்படும்.
ஓய்வூதியப் பலன்களை இலங்கை தமிழர்களுக்கு வழங்குதல் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை, முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு வழங்கி வருகிறது.
மேலும், தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வாழும் தமிழர்களின் நலனுக்காக, அந்த முகாம்களில் வசிக்கும் மக்களின் குடிநீர் வசதியினை மேம்படுத்துதல், வீடுகளை பழுதுப்பார்த்தல், சாலைகள் சீரமைத்தல், நூலகக் கட்டடம் கட்டுதல், நியாய விலைக் கடை அமைத்தல், கூடுதல் கழிப்பறை மற்றும் குளியலறை ஏற்படுத்துதல், சமுதாய கூடங்கள் அமைத்தல், மின்கம்பங்கள் மற்றும் தெருவிளக்கு அமைத்தல், சமையலறை கட்டுதல் போன்ற அடிப்படை வசதிகளை செய்துக் கொடுப்பதற்காக ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளார்.
தற்போது, அகதிகள் முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களின் நலனுக்காக, கோயம்புத்தூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், மதுரை, புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை, திருவள்ளூர், திருநெல்வேலி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய 14 மாவட்டங்களில் உள்ள 21 அகதிகள் முகாம்களில் ஒரு வீட்டிற்கு ரூ. 1 லட்சம் மதிப்பீட்டில் 2,500 நீடித்து நிலைக்கக்கூடிய புதிய வீடுகளை கட்டுவதற்கும், அதற்காக ரூ. 25 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply