இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்குமாறு வேண்டுகோள்

இலங்கையில் 2013ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுநலவாய உச்சி மாநாட்டை புறக்கணிக்குமாறு பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோனிடம் அந்த நாட்டின் நாடாளுமன்ற வெளிவிவகாரக்குழு கோரியுள்ளது. இது தொடர்பில் அந்தக் குழு வெளியிட்டு அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2013ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய உச்சி மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் தவறானது ஆகும். இந்த உச்சி மாநாடு நடைபெறவிருக்கின்ற இலங்கையில் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றமைக்கான சாட்சியங்கள் இருக்கின்றன.

மனித உரிமைகளை பாதுகாப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் மற்றும் அரசியல் உரிமைகளை பாதுகாத்து உறுதிப்படுத்தும்வரை அங்கு நடைபெறவிருக்கின்ற பொதுநலவாய உச்சி மாநாட்டில் பங்கேற்பதை பிரித்தானிய பிரதமர் புறக்கணிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மனித உரிமை சாதனைகளில் முன்னேற்றம் காணப்படாதுவிடின் நவம்பர் 2013ஆம் ஆண்டில் நடைபெறும் மாநாட்டை தான் பகிஷ்கரிக்கப்போவதாக கனேடியப் பிரதமர் ஸ் ரீபன் ஹாப்பர் ஏற்கெனவே கூறியுள்ளார். பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹாப்பரின் தெளிவான வெளிப்படையான நிலைப்பாட்டை பாராட்டியிருப்பதுடன், கமரோன் அவரை பின்பற்ற வேண்டும் என கூறியுள்ளனர்.

‘இலங்கையில் தொடர்ச்சியான மனித உரிமை மீறல்கள் நடப்பதற்கான சான்றுகள் இருப்பதால் கொழும்பில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை நடத்த தீர்மானித்தமை பிழை என நாம் கருதுகின்றோம்’ என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply