இனப்பிரச்சினை தொடர்பில் கூட்டமைப்புடன் அரசு பேசவேண்டும் – சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு

இலங்கை அரசாங்கம் இனப்பிரச்சினை தீர்வை நோக்காக கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி அதன் மூலம் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை இனப்பிரச்சினை தீர்வுக்கான வழியில் இட்டுச் செல்ல வேண்டும் சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு தெரிவித்துள்ளது.  இந்த குழு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

13ம் அரசியல் திருத்தத்தை முழுமையாக செயற்படுத்துவதுடன், அதில் இருந்து அதிகாரங்கள் பறிக்கப்படுவதை கைவிட வேண்டும் என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உரிய வகையில் அமுலாக்க வேண்டும் என்பதோடு, தமிழ் பிரதேசங்களில் தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

வடக்கு கிழக்கு பிரதேசத்தின் தமிழ் பேசும் மக்களின் அடையாளங்களை ஏற்றுக் கொள்வதுடன், அதன் அடிப்படையில், அதன் அடிப்படையில் அங்கு குடிப்பரம்பலை மாற்றும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கான சில பரிந்துரைகளையும் சர்வதேச நெருக்கடி குழு முன்வைத்துள்ளது.

அதன்படி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, இலங்கை அரசாங்கத்துடன் இணக்கப்பாட்டுக்கு சென்று இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகளும் போரின் போது குற்றமிழைத்தார்கள் என்ற அடிப்படையில் சர்வதேச விசாரணைகளுக்கு ஒத்துழைக்கு வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட்ட முஸ்லிம் கட்சிகளுடன் இணக்கப்பாட்டுடன் செயற்பாட்டு, அதிகார பரவலாக்கம் தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மலையக தமிழர்கள் மற்றும் வடக்கு கிழக்குக்கு வெளியில் உள்ள தமிழர்களின் மொழி மற்றும் ஏனைய அடிப்படை அதிகார பரவலாக்கம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது கவனத்தை செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வடக்கு கிழக்கின் அதிகாரப் பரவலாக்கலுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஒத்துழைக்க வேண்டும்.

இதற்கிடையில், தமிழ் நாடும் புலம்பெயர்ந்த தமிழர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளின் போர்க்குற்றங்களையும் ஏற்றுக் கொண்டு அதற்கான விசாரணைகளுக்கு ஒத்துழைக்கு வேண்டும்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்க காத்திரமான தீர்வை காண்பதற்காக, தமிழ் தேசிய கூட்டமைப்பு உரிய திறன்மிக்க ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

சர்வதேச நாடுகளான சீனா, இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை, ஒஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் இலங்கை அரசாங்கத்தை நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வழிக்கு இட்டுச் செல்ல வேண்டும் என்றும் நெருக்கடி குழு வலியுறுத்தியுள்ளது.

அதேநேரம் சர்வதேச நிதி நிறுவனங்கள் இலங்கையில் நல்லிணக்கத்தை அடிப்படையாக கொண்டு கடன் திட்டங்களை இலங்கை அரசாங்கத்துக்கு வழங்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply