ஷிராணிக்கு எதிரான மேலதிக விசாரணை ஒத்திவைப்பு

இலங்கையின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான குற்றஞ்சாட்டி பதவி நீக்கும் நடைமுறைகளை இன்று ஆரம்பித்த அதற்கான நாடாளுமன்ற தெரிவுக்குழு, அதன் மேலதிக விசாரணைகளை டிசம்பர் மாதம் 4 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது. தனக்கு எதிரான விசாரணைகளுக்கு முகம் கொடுப்பதற்காக ஷிராணி பண்டாரநாயக்கா வெள்ளியன்று காலையில் நாடாளுமன்றத்துக்கு தனது சட்டத்தரணிகள் சகிதம் வந்திருந்தார்.

சட்டத்தரணிகள் இல்லாமல் தனியாக ஆஜராகுமாறு தெரிவுக்குழு முதலில் விடுத்த வேண்டுகோளை தலைமை நீதிபதி நிராகரித்துவிட்டார். அதன் பின்னர் சட்டத்தரணிகள் சகிதம் ஆஜராகுவதற்கு அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

விசாரணைகளை ஆரம்பித்த தெரிவுக்குழு, தலைமை நீதிபதி தனது தரப்பு வாதங்களை எழுத்து மூலம் முன்வைப்பதற்காக இம்மாதம் 30 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கியுள்ளது.

அதனையடுத்தே மேலதிக விசாரணை அடுத்த மாதம் 4 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டாக்டர் ஷிராணி பண்டாரநாயக்கா மீது 14 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இவை நிதி மற்றும் அதிகார துஷ்பிரயோகம் சம்மந்தப்பட்டவை. இக் குற்றச்சாட்டுகளை 54 வயதாகும் தலைமை நீதிபதி மறுத்துள்ளார்.

முன்னதாக, இக் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் அதிகாரம் படைத்த 11 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் முன்பாக ஆஜராகுவதற்காக தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற வளாகத்தில் இருந்து கிளம்பியபோது ஏராளமான வழக்கறிஞர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

சிரித்த முகத்துடன் தலைமை நீதிபதி நாடாளுமன்ற தெரிவிக் குழுவினரை சந்திக்கச் சென்றிருந்தார்.

அரசின் இந்த முயற்சி நீதித்துறையின் சுதந்திரத்தை மட்டுப்படுத்துவதாகும் என்று விமர்சகர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதை அரசு மறுக்கிறது.

அதேநேரம் தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்கா வழக்குகளை விசாரிக்கக் கூடாது என்று அரச ஊடகங்கள் பிரசாரம் செய்து வருகின்றன.

இந்தக் குற்றஞ்சாட்டி பதவி நீக்குவதற்கான நடவடிக்கை குறித்த வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், அவை முடிவுக்கு வரும் வரை தெரிவுக்குழுவின் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று நீதிமன்றம் ஒன்று கேட்டிருக்கிறது. ஆனால், அந்த கோரிக்கைக்கு சட்டரீதியாக கட்டுப்படுத்தும் அதிகாரம் கிடையாது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply