இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டை மலேசியா புறக்கணிக்க வேண்டும்!

தமிழர்களின் நீதிக்காக அடுத்த ஆண்டு இறுதியில் இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டை மலேசியா புறக்கணிக்க வேண்டும் என்று சுவராம் மனித உரிமை கழகத்தின் தலைவர் கா.ஆறுமுகம் கேட்டுக்கொண்டார். இலங்கையில் 2009-ஆம் ஆண்டு இடம் பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது நான்கு இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டதை நவம்பர் 14-இல் வெளியான ஐக்கிய நாட்டு மன்றத்தின் இரகசிய அறிக்கை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

இதற்கு முன்பு சானல் 4 என்ற தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் ஐக்கிய நாட்டு சபையின் நிபுணத்துவ அறிக்கை போன்றவை இந்த குற்றச்சாட்டுகளை இலங்கை அரசு மீது சுமத்தியிருந்தன; ஆனால் அவற்றை உலக நாடுகள் வெகுவாக பொருட்படுத்தவில்லை.

இலங்கையின் இறுதிக் கட்டப் போரின்போது தமிழர்களைப் பாதுகாக்க ஐ.நா மன்றம் தவறியது குறித்த 124 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் கடந்த புதன் கிழமை வெளியிட்டார். இது ஐ.நாவின் செயற்பாடுகள் மீதான ஐ.நா பொதுச் செயலாளரின் உள்ளக மீளாய்வு குழுவின் அறிக்கை என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.

இது சார்பாக மேலும் விவரித்த வழக்கறிஞருமான கா. ஆறுமுகம்; “போர் வலயத்தில் சிக்குண்ட தமிழர்களை பாதுகாக்க ஐ.நா உயர்மட்ட அதிகாரிகள் தலையிடவில்லை; அத்தோடு இலங்கை அரசினால் மிகமோசமாக மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் குறித்த தகவல்களையும் ஐ.நா வெளியிடவில்லை. காரணம், இலங்கை அரசாங்கத்திற்குப் பயந்து இவ்வாறான தகவல்களை ஐ.நா அதிகாரிகள் வெளியிடவில்லை என்கிறது அவ்வறிக்கை” என்கிறார்.

“ஐ.நா தமிழர்களை கைவிட்டது ஒரு புறமிருக்க, நீதி நியாயம் கோரும் வகையில் மலேசியர்கள் செயல்பட வெண்டும். காமன்வெல்த் மாநாடு இதற்கு முன்பு தென் ஆப்பிரிக்கா, பிஜி, பாகிஸ்தான், சிம்பாவே போன்ற நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தனது பங்கை ஆக்ககரமாக செய்துள்ளது.

ஆனால், 54 நாடுகள் உறுப்பியம் பெற்றுள்ள காமன்வெல்த் தனது அடுத்த மாநாட்டை இலங்கையில் நடத்த எடுத்த முடிவு இரத்தக்கறை படிந்த இலங்கையை அரவணைப்பதாக தோன்றுகிறது. அதில் மலேசியா கலந்து கொண்டால் அதனால் நமது நாட்டிற்கு கலங்கம்தான் உண்டாகும், அதோடு அது நமது நாட்டு மக்களை அவமதிப்பதகவும் அமையும்.

அடுத்த ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டை மலேசியா புறக்கணிக்க வேண்டும் என்பதே சுமார் 18 லட்சம் தமிழர்கள் வாழும் மலேசிய மக்களின் எதிர்பார்பாக இருக்கும் என்கிறார் கா. ஆறுமுகம்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply