தற்போதைய பாரம்பரியத்தை இந்திய மக்கள் தொடர்ந்து பேணி பாதுகாக்க வேண்டும் – தலாய் லாமா

கேரள மாநிலம், கொச்சியில் உள்ள 1960 ஆண்டு பழமையான மலங்காரா ஆர்த்தோடாக்ஸ் தேவாலய நிகழ்ச்சியில் புத்தமத துறவியும், நோபல் பரிசு பெற்றவருமான தலாய் லாமா, இந்திய முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல்கலாம் ஆகியோர் பங்கேற்றனர்.  இந்நிகழ்ச்சியில் தலாய் லாமா பேசியதாவது:-

பல்வேறு மத பாரம்பரியங்களைக் கொண்ட மக்கள் நல்லிணக்கத்துடன் வாழும் முன்மாதிரி நாடாக இந்தியா திகழ்கின்றது. இந்த பாரம்பரியத்தை இந்திய மக்கள் தொடர்ந்து பேணி பாதுகாத்து வர வேண்டும். ஆரிய பூமியான இந்தியாவை ஆன்மீக ரீதியாக நாங்கள் மிகமிக முக்கியமான நாடாக கருதுகின்றோம்.

கடந்த 3 ஆயிரம் ஆண்டுகளாக புத்தம், ஜைனம் உள்ளிட்ட பல்வேறு மத பாரம்பரியங்கள் இந்தியாவில் செழித்தோங்கி உள்ளன. பல பாரம்பரியங்களை கடைபிடிக்கும் மக்கள், மத நல்லிணக்கத்துடன் அமைதியாக வாழும் பூமியாக இந்தியா உள்ளது.

இன்றைய உலகில் இந்தியாவின் பாரம்பரியம் மிகவும் பொருத்தமானது. ஆயிரக்கணக்ககான ஆண்டுகளாக இந்தியா கடைபிடித்து வரும் அகிம்சை தத்துவம், இன்றளவும் பொருந்தக்கூடியதாக உள்ளது. அன்பு, கருணை போன்றவற்றை நமது அன்றாட வாழ்க்கையில் கடைபிடித்து ஆன்ம அமைதியை நாம் ஏற்படுத்திக்  கொள்ள வேண்டும்.

21-ம் நூற்றாண்டில், எல்லா இடங்களிலும் வாழும் மக்கள், பொருள் மதிப்பைப் பற்றியே பேசுகின்றனர். அதுவும் முக்கியமானது தான். பொருள் மதிப்பு உடலுக்கு மட்டுமே சுகத்தையும் ஆறுதலையும் தரும். ஆனால் இதய சுகத்தையும், ஆறுதலையும் பக்தியாலும், நம்பிக்கையாலும் மட்டுமே பெற முடியும்.

ஆரோக்கியமான மனமும், உடலும் ஒருசேர பயணிக்கும். கலக்கமடைந்த மனம் ஆரோக்கியத்திற்கு கேடாக அமைந்து விடும். பொருள் இன்பம் மட்டுமே மகிழ்ச்சி ஆகிவிடாது. இவ்வாறு அவர் பேசினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply