இந்தியாவிலிருந்து தப்பியோட முயற்சித்த இலங்கையர்களை காணவில்லை
நாகை கடற்கரையில் நேற்று இன்ஜின் பழுதால் விசைப்படகு ஒன்று தரைதட்டி நின்றது. அதில் வந்த 50க்கும் மேற்பட்டோரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நாகை துறைமுக பகுதியில் கீச்சாங்குப்பம் அருகில் உள்ள கடற்கரை பகுதியில் நேற்று காலை விசைப்படகு ஒன்று தரை தட்டி நின்றது. தகவலறிந்த நாகை கடலோர காவல்படை பொலிசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். கடற்கரையில் கொட்டப்பட்டுள்ள கற்குவியலில் 20க்கும் மேற்பட்ட பைகள் கிடந்தன. பைகளில் துணி வகைகள், பிஸ்கட் பாக்கெட்டுகள், குழந்தைகளுக்கான பவுடர், ஆயில், மருந்து பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்கள் இருந்தது.
இது தொடர்பாக மீனவர்கள் கூறியதாவது: அதிகாலையில் கடற்கரையில் 10க்கும் மேற்பட்டவர்கள் உட்கார்ந்திருந்தனர். சுற்றுலா பயணிகளாக இருக்கும் என நினைத்திருந்தோம். அப்போது ஒரு மணி நேரம் வரை மழை பெய்தது. இந்த நேரத்தில் அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டதை நாங்கள் கவனிக்கவில்லை.
மழை நின்றதும்தான் விசைப்படகு ஒன்று கரை ஒதுங்கி இருப்பதும், அருகில் கிடந்த பைகளில் நிறைய உடைகள் இருப்பதையும் பார்த்தோம். அவர்கள் இலங்கை தமிழர்கள் போல் இருந்தார்கள். எனவேதான் இது குறித்து பொலிசுக்கு தகவல் தெரிவித்தோம். இந்த படகு ஓராண்டுக்கு முன் காரைக்கால் பகுதியை சேர்ந்த ஒரு மீனவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த நபர்தான் இலங்கை தமிழர்களிடம் படகை விற்றிருக்க வேண்டும்.
இவ்வாறு மீனவர்கள் கூறினர். இது குறித்து பொலிஸ் தரப்பில் கூறியதாவது: 2 நாட்களாக இந்த விசைப்படகு துறைமுகத்தில்தான் நின்றுள்ளது. துறைமுக பகுதியில் உள்ள ஒரு பங்க்கில் காரைக்கால் பதிவு எண்ணை தெரிவித்து டீசல் போட்டிருக்கிறார்கள். நேற்று முன்தினம் இரவு முதல் இந்த படகு துறைமுகத்தில் இல்லை என்றும், எப்போது கடலுக்கு கிளம்பி சென்றது என தெரியவில்லை என்றும் மீனவர்கள் சொல்கிறார்கள். படகில் 50க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் இருந்திருக்கிறார்கள்.
அவர்களை நாகைக்கு அருகில் தெற்கு பொய்கைநல்லூர், வேளாங்கண்ணி பகுதிகளில் இருந்து படகில் ஏற்றி இருக்க வேண்டும் அல்லது அவர்களை கரையில் இருந்து பைபர் படகு மூலம் கடலுக்கு அழைத்து சென்று, கடலில் இருந்து விசைப்படகில் ஏற்றி இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது.
விசைப்படகு என்ஜினில் பழுது ஏற்பட்டதால் அவர்கள் கரை ஒதுங்கி இருக்கலாம். அதிக நேரம் கரையில் இருந்தால் போலீசாரிடம் சிக்கி விடுவோம் என்று சிறுசிறு குழுவாக அவர்கள் தப்பி இருக்க வேண்டும். அப்படி அவர்கள் தப்பி இருந்தால் வேளாங்கண்ணி விடுதிகளில் தங்கி இருக்கலாம். இல்லாவிடில் பஸ்சில் ஏறி அருகில் உள்ள ஊருக்கு சென்றிருக்கலாம். அவர்கள் எங்கிருந்தாலும் விரைவில் பிடிபட்டு விடுவார்கள்.
கடற்கரையில் கிடந்த உடைகள் மற்றும் பொருட்களை பார்க்கும்போது அவற்றை சென்னையில் சமீபத்தில் வாங்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். அவர்கள் இலங்கையில் இருந்து தப்பி வந்திருக்க வாய்ப்பில்லை. தமிழகத்தில் உள்ள அகதி முகாமில் இருந்து வெளிநாடு செல்ல முயன்று இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். எதையும் உடனடியாக சொல்ல முடியாது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு பொலிசார் தெரிவித்தனர். நாகை கடற்கரையில் விசைப்படகு தரைத்தட்டி நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply