பௌத்த பிக்குகளுக்கு ஊட்டச்சத்து திட்டம்

பௌத்த பிக்குகளுக்கு இலங்கையின் பெரும்பான்மை இன பௌத்தமக்கள் வழங்குகின்ற உணவு நன்கொடைகள் அவர்களுக்கு சுகாதாரமாக அமைய வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதற்காக, இலங்கை அரசாங்கம் ஒரு ஊட்டச்சத்து நெறிமுறை ஒன்றை வரைந்துகொண்டிருக்கிறது. சர்க்கரை வியாதி உட்பட உணவுகள் சம்பந்தப்பட்ட நோய்களால் பௌத்த பிக்குகள் பாதிக்கப்படுவது அதிகரிப்பதாக செய்திகள் வந்துகொண்டிருக்கும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இலங்கையில் இருக்கின்ற பிக்குமாரின் வாழ்க்கை கொஞ்சம் சிக்கனமானது. அவர்கள் தமக்காக சமைப்பது கிடையாது. அதற்குப் பதிலாக பக்தர்கள், கோயிலிலோ அல்லது வீடுகளிலோ அவர்களுக்கு சிறப்பு நாட்களில் வழங்கும் உணவுகளை அவர்கள் உண்பார்கள். சில வேளைகளில் இந்த பிக்குமார் பக்தர்களின் வீடுகளுக்கும் உணவுக்காக செல்வதுண்டு.

பௌத்த பக்தர்களால் பிக்குகளுக்கு வழங்கப்படும் உணவு பெரும்பாலும் மரக்கறிதான். ஆனால் அதுவும் எப்போதும் சுகாதாரமானதாக இருக்காது என்று சுகாதார அமைச்சு கூறுகின்றது.

இதனால், சிறிய வயது பிக்குமாருக்கு கூட சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதயம் சம்பந்தமான நோய்கள் வந்துவிடுவதாக அது கூறுகிறது.

பாரம்பரிய வழமைகளின்படி பிக்குமார் தமக்கு என்ன கிடைக்கிறதோ அதனை உண்ண வேண்டும். அதனால், தமது உணவை தெரிவு செய்துகொள்ளூம் வாய்ப்பு அவர்களுக்கு கிடையாது.

சர்க்கரை உணவு மற்றும் கொழுப்பு உணவு ஆகியவற்றுக்கு பிரபலமான இலங்கையில் சில நேரங்களில் பிக்குமார் வயிறு நிறைய சாப்பிட நேரிட்டு விடுகிறது.

அத்துடன் பிக்குமார் சரியாக உடற்பயிற்சிகளும் செய்யாது போனால் நிலைமை மேலும் மோசமாகிவிடுகிறது என்று கூறுகிறார் இலங்கை சுகாதார அமைச்சர் மைத்திரி பால சிரிசேன.

ஆகவே இந்த விடயத்தில் பிக்குமாரையும், அவர்களுக்கு உணவு வழங்கும் பக்தர்களையும் வழி நடத்துவதற்கான வழிமுறை ஒன்றை வகுக்குமாறு உணவு நிபுணர்களை அமைச்சு கேட்டிருக்கிறது. இதன் முழுமையான வடிவம் அடுத்த மாதந்தான் வெளிவரும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply