மனித உரிமை மீறல் தொடர்பில் இலங்கை பொறுப்புக் கூற வேண்டும் – மலேசியா

இலங்கையில் நடைபெற்ற இறுதிகட்ட போரின் போது, இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, சரியான பொறுப்புக் கூறல் இருக்க வேண்டும் எனவும், ஐக்கிய நாடுகள் சபைக்கு கொடுத்த வாக்குறுதிகளை இலங்கை அரசு நிறைவேற்ற, மலேசிய அரசு, அதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர். இது தொடர்பில் மலேசிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு விரைவில் இலங்கை சென்று போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், அங்குள்ள மக்களையும் நேரில் சந்தித்து ஒரு அறிக்கையை தயார் செய்யும் என அந்தக் குழுவின் ஒரு உறுப்பினரான ராசைய்யா சிவராசா பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

இதுவரை காலம் இலங்கை தமிழ் மக்களின் நலன்கள் குறித்து நாடாளுமன்றத்துக்கு வெளியே குரல்கள் கொடுக்கப்பட்டு வந்தன என்றும் இனி இந்தக் குழுவின் மூலம் நாடாளுமன்றத்தில் உள்ளேயும் அது ஒலிக்கும் எனவும் சிவராசா கூறுகிறார்.

இந்தக் குழுவுக்கு மலேசியப் பிரதமரின் அலுவலகத்தில் துணை அமைச்சராக இருக்கும் எஸ் கே தேவமணி தலைமையேற்றுள்ளார்.

மனித உரிமைகளை மேம்படுத்துவதிலும், போரின் போது இடம்பெற்ற மீறல்களுக்கு பொறுப்பு கூறும் நடவடிக்கையிலும் இதுவரை என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை தெரிவிக்கக் கோரிஇ இலங்கைக்கு கடிதம் ஒன்றும் அனுப்பப்படும் எனவும் அந்தக் குழுவினர் கூறுகிறார்கள்.

இந்த முன்னெடுப்பு வரவேற்கத்தக்கது என்றாலும், உள்நாட்டில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழர்களின் நலன்களுக்காக போதுமான அளவில் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுப்பதில்லை என்று மலேசிய மனித உரிமைகள் கட்சியின் தலைமைச் செயலர் பொன்னுசாமி உதயகுமார் கூறுகிறார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply