மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து யாழில் இருநாட்கள் ஆர்ப்பாட்டம்

யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்றும், நேற்றுமுன் தினமும் இராணுவத்தினர் நடந்து கொண்ட அடாவடித்தன செயலைக் கண்டித்து எதிர்வரும் 4 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ். பஸ் நிலையத்துக்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கப் போவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.  இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை விடுத்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி. யாழ். பல் கலையில் இராணுவத்தினரின் அடாவடிச் செயலை வன்மையாகக் கண்டித்துள்ளது.

இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நேற்றுமுன்தினம் மாலை பல்கலைக்கழக மாணவர்களின் விடுதிக்குள் நுழைந்த இராணுவத்தினர் கதவுகளை உடைத்தும், மாணவர்களைத் துப்பாக்கி கொண்டு மிரட்டியும் தமது அடாவடித் தனத்தில் ஈடுபட்டனர்.

இதனைக் கண்டித்து நேற்று பல்கலைக்கழக மாணவர்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன்போது இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து மாணவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தினர். பெண்பிள்ளைகளையும் இதன்போது கொட்டன் கொண்டு தாக்கியுள்ளனர்.

எமது இளம் சமூகமே எதிர்காலச் சிற்பிகள், அவர்கள் தமது உரிமைகள் மீறப் படும்போது குரல் கொடுப்பவர்கள். இந்த வேளையில் ஆயுததாரிகள் அவர்களது உரிமைகளை அடக்கி பறித்துள்ளனர். இந்தவேளையில் தமிழ் மக்களாகிய நாங்கள் ஒன்றிணைந்து எமது உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டியது அவசியமாகும்.

எனவே மாணவர்களதும், தமிழ் மக்களதும் சுதந்திரத்தையும், உரிமைகளையும் வலியுறுத்தி நாம் ஒன்றிணைந்து போராடுவோம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் மற்றும் பல்வேறு தாக்குதல் சம்பவங்களைக் கண்டிக்கும் முகமாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் எதிர்வரும் (03.12.2012 ) திங்கட்கிழமை அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த (27.11.2012) செவ்வாய்க்கிழமை அன்று பல்கலைக்கழக மாணவர்கள் மீது, பல்கலைக்கழக விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடாத்தியமை மற்றும் மேற்படி சம்பவங்களைக் கண்டித்து (28.11.2012) புதன்கிழமை அன்று யாழ். பல்கலைக்கழகத்தில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்த யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மீதான பாதுகாப்புப் படை மற்றும் காவல்துறையினர் கோரமான முறையில் தாக்கியமையைக் கண்டிக்கும் முகமாகவும் மற்றும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் அவர்கள் தாக்கப்பட்டமை, காரை நகர் பிரதேச சபைத் தலைவர் வே.ஆனைமுகன் அவர்களது வீடு எரிக்கப்பட்டைமை ஆகியவற்றை கண்டிக்கும் முகமாகவும் எதிர்வரும் 03.12.2012 அன்று திங்கட்கிழமை மு.ப 10 மணியளவில் நல்லூர் கந்தசாமி கோவிலருகில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

யுத்தம் முடிந்தும் 3 ஆண்டுகளுக்கு பின்னும் ஜனநாயக முறைமையில் குந்தகம் விளைவிக்கின்றமை ஆகியவற்றைக் கண்டித்து இடம்பெறும் இப்போராட்டத்திற்கு ஜனநாயக விரும்பிகள் அனைவரையும் இனத்துவம் கடந்து சகோதரத்துவ முறையில் பங்குகொண்டு எமது ஜனநாயக உரிமைக் குரலுக்கு வலுச்சேர்க்குமாறு அன்புரிமையுடன் அழைக்கின்றோம். என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply