இலங்கை நீதித்துறை நாடாளுமன்றத்தின் சிறப்புரிமைகளை மீறும்வகையில் செயற்படவில்லை
இலங்கை நீதித்துறை நாடாளுமன்றத்தின் சிறப்புரிமைகளை மீறும்வகையில் செயற்படவில்லை என உச்சநீதிமன்ற நீதியரசர்கள் அறிவித்துள்ளனர். தலைமை நீதியரசரை பதவியிறக்கும் கண்டனத் தீர்மானத்துக்கு எதிராக தாக்கல்செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே நிமல் காமினி அமரதுங்க, கே.ஸ்ரீபவன் ஆகிய நீதியரசர்கள் இந்தக் கருத்தை வெளியிட்டனர்.
நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு தாம் அடியபணிய மாட்டோம் என்று நாடாளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ள நிலையில், உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளனர்.
இன்று மனுக்கள் நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டபோது, மனுக்களில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள சபாநாயகர் மற்றும் தெரிவுக்குழு உறுப்பினர்கள் எவரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை.
எனவே, பிரதிவாதிகளுக்கு தமது ஆட்சேபணைகளை முன்வைப்பதற்கு எதிர்வரும் 13-ம் திகதிவரை காலஅவகாசம் வழங்குவதாக நீதிபதிகள் அறிவித்தனர். அதன்பின்னர் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
கடந்த சில மாதங்களாக அரசாங்கத்துக்கும் நீதித்துறைக்கும் இடையில் நிலவிவரும் முறுகல் நிலையை தீர்ப்பதற்காகவே உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையீடுகளை மேற்கொண்டுள்ளதாக நீதியரசர் கே.ஸ்ரீபவன் தெரிவித்தார்.
தலைமை நீதியரசருக்கு எதிரான கண்டனத் தீர்மானம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும்போது, தமக்கு அரசியலமைப்பில் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு உட்பட்டே தாம் செயற்பட்டுள்ளதாக நீதியரசர்கள் சுட்டிக்காட்டியதாக மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply