யாழ். பல்கலை மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு நாம் தமிழர் கட்சி கண்டனம்
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- இலங்கையில் தமிழர் தாயகத்தின் விடுதலைக்காக போராடி தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த மாவீரர்களுக்கு ஆர்ப்பாட்டம் இன்றி, அமைதியாகக் கூடி தீபம் ஏற்றி வீரவணக்கம் செலுத்திய யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது சிங்கள ராணுவத்தின் உளவுப் பிரிவினரும், காவல் துறையினரும் காட்டு மிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்திற்குள், மாணவர்கள் தங்கள் விடுதியிலும், அதேபோல் மாணவிகள் தங்களுடைய விடுதியிலும் தனித்தனியாக நவம்பர் 27-ம் திகதி மாவீரர் தினத்தை கடைபிடித்ததையடுத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
யாழ் பல்கலை மாணவிகள் மாவீரர் தினத்தை நடத்திடக்கூடாது என்பதற்காகவே, அவர்களுடைய விடுதியின் ஒவ்வொரு அறைக்கும் வெளியே காவலர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர்.
ஆனால் அதையும் மீறி மாலை சரியாக 6.07 மணிக்கு அவர்கள் தீபம் ஏற்றி வீர வணக்கம் செலுத்தியதை தடுக்க முடியாததால், ஆத்திரமுற்ற சிங்கள படையினர் மாணவிகள் மீது தாக்குதல் நடத்தியது மட்டுமின்றி, அவர்களை இழிவுபடுத்தியும் உள்ளனர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மட்டுமின்றி, நகரத்தில் வாழும் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் அமைதியாக மாவீரர்கள் வீரவணக்கம் செலுத்தியுள்ளனர். அப்போது கோயில்களில் உள்ள மணிகள் ஒருசேர ஒலித்துள்ளன. இதனால் கோபமுற்ற சிங்கள படைகள் இப்படிப்பட்ட வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
மாணவிகளின் விடுதிக்குள் சிங்கள படையினர் அத்துமீறி நுழைந்ததையும், மாணவிகள் மீது தாக்குதல் நடத்தியதையும் கண்டித்து, கடந்த 28-ம் திகதியன்று யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் நடத்திய அமைதிப் பேரணியின் மீதும் சிங்கள காவல்படையினரும், ராணுவத்தினரும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது யாழ்ப்பாணத்திலும், வன்னி மாவட்டங்களிலும் தமிழர்களிடையே பெரும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது.
தங்களுடைய விடுதலைக்காக போராடி உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு வீர வணக்க நிகழ்வை நடத்திய நம் மாணவ சொந்தங்களின் மீது சிங்கள இனவெறிப் படைகள் நடத்தியுள்ள இந்த வன்முறையை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. ஜனநாயக உரிமைகளை சகித்துக்கொள்ள வக்கற்ற சிங்கள படையினர் நடத்திய இந்த அராஜக செயலை இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் கண்டித்துள்ளது. ஆனால் கொழும்புவிலும், யாழ்ப்பாணத்திலும் உள்ள இந்தியத் தூதரங்கள் அமைதி காக்கின்றன.
தங்களின் விடுதலைக்காக உயிர்தியாகம் செய்த மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்திய மாணவர்களிடம் ஆயுதம் இருந்ததா? இல்லையே? பிறகு ஏன் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினாய் என்று அமெரிக்கா கேட்கிறது. ஆனால் இந்திய அரசும் இங்குள்ள கட்சிகளும் மௌனம் காக்கின்றனவே, ஏன்? இலங்கையில் வாழ்ந்தாலும், உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எம் தமிழருக்கு இன்னல் விளைவித்தால் அதற்காக நாங்கள் கொதித்தெழுவோம்.
இப்போதும் கூறுகிறோம், யாழ்ப்பாண மாணவர்கள் மீதான சிங்கள படைகளின் அராஜகம் தொடருமானால் அது இங்கேயும் எதிரொலிக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
சிங்கள பௌத்த இனவாத அரசின் ஆக்கிரமிப்பில் ஈழத் தமிழினம் சிக்கியிருப்பதாலும், தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டிருப்பதாலும், எம் இனத்தின் விடுதலை போராட்டம் ஜனநாயக வழிகளில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுதான் வருகிறது.
ஒன்றே முக்கால் லட்சம் தமிழர்கள் இன அழித்தலுக்கு ஆளாக்கப்பட்டதாலேயே எமது விடுதலைப் போராட்டம் நசுக்கப்பட்டுவிட்டது என்று சிங்கள அரசோ அல்லது அதற்கு முட்டுக்கொடுத்து காப்பாற்றிவரும் தெற்காசிய வல்லாதிக்கங்களோ நினைத்துக்கொண்டிருந்தால் அது வெறும் பகல் கனவாக முடியும் என்பதை கூறிக் கொள்கிறோம்.
தாயக விடுதலைக்காக போராடிவரும் எம்மக்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி எப்போதும் துணையாக இருந்து போராடும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இனத்தின் விடுதலைப் போராட்டமாகவே நாங்கள் பார்க்கின்றோம். எப்படிப்பட்ட அடக்குமுறையாலும் அதனை ஒடுக்கிவிட முடியாது என் பதை திட்டவட்டமாகத் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply