வன்னி போர் பகுதியில் இருந்து நோயாளர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் கப்பல் மூலம் வெளியேற்றம்

வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் மோதலில் இடையில் அகப்பட்ட நோயாளிகள் மற்றும் காயம்பட்டவர்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கப்பல் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

அந்த வகையில், முதல் கட்டமாக சுமார் 250 பேர்வரை சிகிச்சைக்காக இன்று புதுமாத்தளனில் இருந்து இந்த கப்பலில் திருகோணமலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

மோதலில் ஈடுபடுகின்ற இரு தரப்பினரின் இணக்கத்துடனேயே இந்தக் கப்பல் மூலமான பாதுகாப்பான வெளியேற்றத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கொழும்புக்கான பேச்சாளர் சரசி விஜேரட்ண  தெரிவித்துள்ளார்.
 
இந்தக் கப்பல் முல்லைத்தீவில் இருந்து புறப்பட்டுவிட்டதை உறுதி செய்த கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ரி. சத்தியமூர்த்தி அவர்கள், இவ்வாறு மேலதிக சிகிச்சைக்காக அங்கிருந்து அனுப்பப்பட வேண்டியவர்கள் இன்னும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் அங்கிருப்பதாகவும் குறிப்பிடுகின்றார்.

இந்தக் கப்பல் வந்து சென்ற வேளை அந்தப் பகுதியில் மோதல்கள் சற்று தணிந்திருந்ததாக தென்பட்டதாகவும் அவர் கூறினார்.

புதுமாத்தளன் கடற்கரையிலிருந்து சுப்பல் வரையிலான கடற்பகுதியில் நோயாளர்களை மிகுந்த கவனத்துடன் அழைத்துச் செல்வதற்கு உள்ளுர் மீனவர்கள் தமது படகுகளை வழங்கி பெரிதும் ஒத்துழைத்ததாகவும் சர்வதேச செஞ்சிலுவைக்குழு தெரிவித்திருக்கின்றது.

நோயாளர்கள் அழைத்துச்செல்லப்பட்ட இந்தக் கப்பலில் மருத்துவர்கள், செஞ்சிலுவைக்குழு உறுப்பினர்கள் உட்பட பலரும் பிரயாணம் மேற்கொண்டதாகவும் சர்வதேச செஞ்சிலுவைக்குழு கூறியிருக்கின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply