பொதுமக்கள் மீது புலிகள் தாக்குதல் நடத்தாதிருப்பதற்கு சர்வதேசம் அதி உச்ச அழுத்தம் கொடுக்க வேண்டுமென அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது

மோதல் பிரதேசத்திலிருந்து தப்பிவரும் பொதுமக்கள் மீது புலிகள் தாக்குதல் நடத்தாதிருப்பதற்கு, அவர்கள் மீது சர்வதேச சமூகம் அதி உச்ச அழுத்தத்தைக் கொடுக்க வேண்டுமென்று அரசாங்கம் வேண்டுகோள்விடுத்துள்ளது.அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு சிவிலியன்கள் பாதுகாப்பாக வருவதற்கு இடமளிக்குமாறு, ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் புலிகளை வலியுறுத்துவதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க  தெரிவித்தார்.

விசுவமடு பகுதியில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து, நேற்று அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்த பொதுமக்கள் மீது புலிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும், இந்தச் சம்பவத்தையடுத்து அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு இந்த வேண்டுகோளை விடுப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

நலன்புரி நிலையத்தில் வைத்துத் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும், தொடர்ந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்த வண்ணம் உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் இரவிலிருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்துள்ளனர். நேற்றைய தினம் ஐந்து முதல் ஆறாயிரம் பேர் வரை எதிர்பார் க்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, மீட்கப்படாத பிரதேசங்களிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரும் பொதுமக்களை உள் வாங்குதற்கென நேற்று முதல் புதிய செயற்திட்டம் நடை முறைப்படுத்தப்படுகின்றது.

சிலிவியன்களும், பொதுமக்களும் பாதிப்படையாதிருக்கும் வகையில், சோதனை நடவடிக்கைகளை மேற் கொண்டு வருவதாகக் கூறிய அமைச்சர் தேவையானதும், பொருத்தமானதுமான பாதுகாப்பு வழிமுறையை இராணுவத்தினர் பின்பற்றுகிறார்கலென்றும் அமைச்சர் சமரசிங்க தெரிவித்தார்.

விசுவமடு – சுதந்திரபுரம் பகுதியில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டு 64 பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்றைய தினம் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் 19 பொதுமக்கள் கொல்லப்பட்டு 69 பேர் காயடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையிலும் ஆபத்தான நிலையில் உள்ளோர் அநுராதபுரம் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சமரசிங்க மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply