வன்னி நலன்புரி நிலையங்களுக்கு 20 ஆயிரம் உணவுப் பொதிகள் விமானம் மூலம் அனுப்பிவைப்பு:விங் கமாண்டர் ஜனக நாணயக்கார
வன்னியிலிருந்து இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசங்களை நோக்கி வருகை தந்து நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் பொது மக்களுக்கு விநியோகிக்கவென உணவு, சிற்றுண்டிகளை கொண்ட 20 ஆயிரம் பொதிகள் விமானம் மூலம் நேற்று அனுப்பி வைக்கப்பட்டதாக விமானப் படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.
விமானம் மூலம் பரந்தனுக்குக் கொண்டுச் செல்லப்பட்ட உணவு பொதிகள் அங்கிருந்து சகல நலன்புரி முகாம்களுக்கும் தரைவழியாக விநியோகிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் விமானப் படையினரின் உதவியுடன் இவை விமானம், மூலம் கொண்டுச் செல்லப்பட்டதாக தெரிவித்த அவர், விமான மூலம் வன்னிக்கு பெருமளவில் உணவு, பொதிகள் கொண்டு செல்லப்பட்டது இதுவே முதல் தடவையாகும் என்றார்.
உணவு, சிற்றுண்டிகளை கொண்ட 20 ஆயிரம் பொதிகள் பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் இரத்மலானை விமான நிலையத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து அநுராதபுரம் விமானப் படைத்தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மீண்டும் பரந்தனுக்குக் கொண்டுச் செல்லப்பட்டது.
பரந்தனிலுள்ள இராணுவத்தினரிடம் இந்த பொதிகள் கையளிக்கப்பட்டதாக தெரிவித்த அவர், அங்கிருந்து இவை தரைவழியாக கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றார்.
புலிகளின் பிடியிலிருந்து தப்பி இராணுவத்தினரிடம் பாதுகாப்புத் தேடி வருகை தந்த ஆயிரக்கணக்கான மக்கள் வவுனியா மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த விமானப் படைப் பேச்சாளர், இவர்களின் தேவைகளை கருத்திற் கொண்டு இந்த உணவு பொதிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply