குற்றப்பிரேரணை மீதான விவாதம் ஜனவரி 15, 16 ஆம் திகதிகளில் இடம்பெறும்
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப்பிரேரணை தொடர்பிலான விவாதத்தை 2013 ஆம் ஆண்டு பொங்கலுக்கு பின்னர் நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது. 2013 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் நாடாளுமன்றம் ஜனவரி மாதம் 08 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது. புத்தாண்டுக்கான கன்னியமர்வு அன்றையத்தினமே ஆரம்பிக்கப்படும்.
அந்த தினத்திலேயே குற்றப்பிரேரணை தொடர்பிலான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை தொடர்பில் விவாதத்தை நடத்துவதற்கு கலந்தாலோசிக்கப்பட்ட போதிலும் ஜனவரி மாதம் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் விவாதத்தை நடத்தி அதனை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்றத்தின் அட்டவணையின் பிரகாரம் ஜனவரி மாதம் 15 ஆம் மற்றும் 16 ஆம் திகதிகளில் நாடாளுமன்றம் நடைபெறாது எனினும் குற்றப்பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதற்காக அந்த இரு தினங்களையும் நாடாளுமன்ற விசேட தினமாக கணக்கில் எடுக்குமாறு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிரேஷ்ட உறுப்பினர்கள் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அந்த யோசனைகளுக்கு அமைவாகவே பொங்கலுக்கு மறுநாளான 15 ஆம் திகதியும் மற்றும் 16 ஆம் திகதியும் நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு ஆளும் தரப்பினர் ஆலோசனை நடத்திவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply