​தெரிவுக்குழுவின் பணிகள் நிறைவடைந்தாலும் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த முடியும்

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றஞ்சாட்டிப் பதவி பறிக்கும் பிரேரணையை விசாரித்த நாடாளுமன்ற தெரிவுக்குழு தனது பணிகளை முடித்துக்கொண்டுவிட்டால் கூட அதனை விசாரணைக்காக அழைக்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு உண்டு என்று ஓய்வுபெற்ற நீதியரசரான சி வி. விக்னேஷ்வரன் கூறியுள்ளார். பிரதம நீதியரசரின் விவகாரம் குறித்த வழக்கு ஒன்று குறித்து விசாரணைக்கு வருமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அது குறித்த நாடாளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது.

ஆனால், அதனை நிராகரித்த அந்த தெரிவுக்குழுவின் உறுப்பினரான அமைச்சர் ராஜித சேனரட்ண அவர்கள், தமது தெரிவுக்குழுவின் விசாரணைகள் முடிந்து, அது குறித்த அறிக்கை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், நீதிமன்றம் ”தெரிவுக்குழு உறுப்பினர்களுக்கு” ஆணை பிறப்பிக்க முடியாது என்று கூறியிருந்தார்.

அமைச்சரின் அந்தக் கூற்றுக் குறித்து கருத்து வெளியிட்ட நீதியரசர் விக்னேஷ்வரன் அவர்கள், முடிந்துபோன விடயங்கள் குறித்து தீர்ப்பு வழங்க நீதிமன்றங்களூக்கு அதிகாரம் இருக்கிறது என்றும் அப்படியிருக்கையில் அமைச்சரின் கருத்தை தன்னால் ”சரி” என்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் கூறினார்.

அதுமாத்திரமன்றி நீதிமன்றம் அழைக்கும் போது அங்கே சென்று தமது கருத்தைக் கூறுவதுதான் சரியானதே ஒழிய, அங்கே வரமாட்டேன் என்று கூறுவது நியாயமற்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, தெரிவுக்குழுவால் நாடாளுமன்றத்துக்கு வழங்கப்பட்டது பரிந்துரைகளா அல்லது தீர்மானமா என்பதை பொறுத்து, இந்த விடயத்தில் நீதிபதிகளின் கருத்துக்கள் மாறுபடலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply