ஷிராணிக்கு எதிரான விசாரணைகள் திறந்த மனதுடன் நடத்தப்பட்டது – யாப்பா

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப்பிரேரணை மீதான விசாரணைகள் அரசியலமைப்புக்கு உட்பட்ட வகையில், எவ்வித ஒழிவு மறைவுமின்றி திறந்த மனதுடன் நடத்தப்பட்டது என தெரிவுக்குழுவின் தலைவரும், சுற்றாடல் வளத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். ஆளும் கட்சி என்ற ரீதியில் பொறுப்புணர்வுடன் எவ்வித பக்கச்சார்புமின்றி திறந்த மனதுடன் தெரிவுக்குழு விசாரணைகளில் கலந்துகொண்டிருந்ததாகக் குறிப்பிட்ட அமைச்சர், ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான தெரிவுக்குழுவின் விசாரணைகள் இரகசியமான முறையிலேயோ அல்லது திரைமறைவிலேயோ இடம்பெறவில்லை என்றும் கூறினார்.

கொழும்பு, இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவும் கலந்துகொண்ட இச்சந்திப்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, பிரதம நீதியரசர் ஷிராணி பண்டார நாயக்கவுக்கு எதிரான குற்றப் பிரேரணை விசாரணையில் எதிர்க்கட்சிக்குப் பாரிய பொறுப்பு உள்ளது.

தெரிவுக்குழுவின் விசாரணைகளின்போது எதிர்க்கட்சிகள் தமது கருத்துக்களையோ, யோசனைகளையோ எழுத்துமூலம் முன்வைக்கவில்லை. விசாரணைகளின்போது பொறுப்பற்ற வகையில் எழுந்து சென்ற எதிர்க்கட்சியினர் எவ்விதமான யோசனைகளையும் எழுத்துமூலம் முன்வைத்திருக்கவில்லை.

தெரிவுக்குழு விசாரணைகளில் எதிர்க்கட்சியினருக்கு அதிருப்தி இருந்திருந்தால் அவற்றை, அவர்கள் எழுத்துமூலம் எம்மிடம் சமர்ப்பித்திருக்க முடியும். எனினும் அவர்கள் அவ்வாறு எதனையும் சமர்ப்பிக்கவில்லை. எதிர்க்கட்சியினர் என்ற ரீதியில் அவர்களுக்கு இருந்த பாரிய பொறுப்பிலிருந்து அவர்கள் விலகியுள்ளனர்.

பிரதம நீதியரசர் சட்டத்தரணிகளோடு தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராகும்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நால்வரும் வெளியில் சென்றுவிட்டனர். அவர்கள் அவ்வாறு செய்யாது பொறுப்போடு நடந்திருந்தால் விசாரணைகளை எதுவித குழப்பமுமின்றி நடத்தியிருக்க முடியும். அதேநேரம், ஒருமாத காலத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்ற கால எல்லைக்குள் ஜனவரி 6ஆம் திகதி அந்த அறிக்கையை சமர்ப்பித்திருக்கவும் முடியும்.

தெரிவுக்குழு விசாரணைகளின்போது பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க அவமரியாதையாக நடத்தப்பட்டதாக பலர் கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர். எனினும், இவற்றில் எவ்விதமான உண்மைகளும் இல்லை. பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப்பிரேரணை குறித்து பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகள் மற்றும் அமர்வுகளில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் அடங்கிய அனைத்தும் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.

தெரிவுக்குழு உறுப்பினர்களுக்கிடையில் விவாதிக்கப்பட்ட விடயங்கள், சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணைகள், தெரிவுக்குழுவுக்குக் கிடைக்கப்பெற்ற ஆவணங்கள் உள்ளிட்ட சகல விடயங்களும் இந்தப் புத்தகத்தில் உள்ளடக்கப் பட்டுள்ளன. இதனைப் படித்துப்பார்த்தால் தெரிவுக்குழு விசாரணைகள் ஒழிவு மறைவின்றி, பக்கச்சார்பற்ற முறையில் நடத்தப்பட்டது என்பது தெளிவாகத் தெரியும்.

இந்தப் புத்தகம் எதிர்காலத்தில் இலங்கைக்கான ஒரு சிறந்த ஆவணம் என்பதை சகலரும் விளங்கிக்கொள்ள வேண்டும். மற்றுமொரு கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் யாப்பா, பிரிட்டன், அமெரிக்கா உட்பட பல நாடுகள் இதுபோன்ற பாராளுமன்ற நடவடிக்கைகள் மூலமே பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணைகள் மீதான விசாரணைகளை நடத்தி வருகின்றன என்றார்.

இங்கு கருத்துத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகல்லாகம, பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப்பிரேரணை விடயத்தில் எந்தவித சர்வதேச அழுத்தமும் இல்லை. இவருக்கு எதிரான விசாரணைகள் யாவும் அரசியலமைப்புக்கு உட்பட்ட வகையிலேயே நடத்தப்படுகிறது. இதனால், எந்தவொரு சர்வதேச சமூகமும் தலையிடவில்லை.

அரசியலமைப்புக்கு உட்பட்ட வகையில் நடத்தப்படும் உள்நாட்டு விவகாரத்தில் எந்தவொரு சர்வதேச சமூகமும் தலையிட முடியாது. இது அரசியலமைப்புக்கு உட்பட்ட உள்நாட்டு விடயம் என்பதாலேயே சர்வதேசம் எவ்வித அழுத்தங்களையும் கொடுக்கவில்லை என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply