நெல்சன் மண்டேலா வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார்

தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா (வயது 94) தென் ஆப்பிரிக்காவில் வாழும் கறுப்பின மக்கள் ஆட்சி அதிகாரத்தை பெற வேண்டும் என்று 50 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடத்தியவர். இதற்காக 27 ஆண்டுகள் சிறைக்காவலில் இருந்த மண்டேலா, 1994-ம் ஆண்டு தென் ஆப்பிரக்காவின் அதிபராக பதவி ஏற்றார். தென் ஆப்பிரிக்க வரலாற்றில் அதிபராக பதவியேற்ற முதல் கறுப்பினத் தலைவர் மண்டேலா என்பது குறிப்பிடத்தக்கது.

ஐந்தாண்டுகள் மட்டும் அதிபராக பதவி வகித்த மண்டேலா, அதன் பின்னர் பொதுவாழ்வில் இருந்து ஓய்வு பெற்று, தனது சொந்த கிராமமான குனு-வில் ஓய்வெடுத்து வந்தார். 2010-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் உலக கால்பந்து போட்டி நடந்தபோது, கடைசி முறையாக பொது இடத்தில் தோன்றிய அவர், பூரண ஓய்வெடுத்து வந்தார்.

அவரது உடல் நிலை குறித்து ராணுவ மருத்துவர்கள் அடிக்கடி சோதனை நடத்தி வைத்தியம் அளித்து  வந்தனர். சிறையில் இருந்தபோது காசநோயால் பாதிக்கப்பட்ட மண்டேலா தொடர்ந்து பல வருடங்களாக நுரையீரல் நோயால் அவதிப்பட்டு வருகிறார். கடைசியாக 2011-ல் கடுமையான சுவாச நோய் காரணமாக இரண்டு நாட்கள் தீவிர சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜீலை 18ம் திகதி, 94வது பிறந்த நாளை மண்டேலா கொண்டாடினார். கடந்த 4ம் திகதி நுரையீரல் தொற்று காரணமாக பிரிட்டோரியாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். பரிசோதனை செய்ததில் அவரது பித்தப்பையில் கற்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த 15ம் திகதி  எண்டோஸ்கோபி சிகிச்சை மூலம் பித்தப்பை கற்கள் அகற்றப்பட்டன. அதன் பிறகு ஆஸ்பத்திரியில் தீவிர கண்காணிப்பு பிரிவில் டாக்டர்கள் அவரை கவனித்து வந்தனர். கிருஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னர் அவர் வீடு திரும்புவார் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், உடல்நிலை தேறாத நிலையில், ஆஸ்பத்திரியிலேயே பண்டிகையை கொண்டாடிய மண்டேலா, நேற்று வீடு திரும்பினார்.

தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா அலுவலகம் வெளியிட்டு அறிக்கையில், ‘நெல்சன் மண்டேலா பூரண குணமடையும் வரை, ஜோகனஸ்பர்கில் உள்ள அவரது வீட்டில் நெல்சன் மண்டேலா தங்கியிருப்பார். அரசின் சார்பில் அவருக்கு உயரிய சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என கூறப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply