புலிகளுக்கு ஆயுதம் வாங்க முயன்ற குற்றச்சாட்டு: அமெரிக்காவில் தமிழர்கள் மீது வழக்கு
விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வாங்க முயன்றதாக குற்றம்சாட்டி கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்ட இரு இலங்கை தமிழ்ர்கள் தொடர்பான வழக்கு மீதான முதல் விசாரணை அமெரிக்க நீதிமன்றில் இடம்பெற்றுள்ளது. பிரதீபன் நடராஜா (36), சுரேஸ் சிறீஸ்கந்தராஜா (32) ஆகிய இருவரும் தம்மை அமெரிக்காவுக்கு நாடு கடத்தக் கூடாது என்று கோரி கனேடிய உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக 2004ம் ஆண்டுக்கும் 2006ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் அமெரிக்காவில் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை வாங்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகளுக்காக நிதி திரட்டியது, 1 மில்லியன் டொலர் பெறுமதியான, 20 எஸ்.ஏ-18 விமான எதிர்ப்பு ஏவுகணைகள், 10 ஏவுகணை செலுத்திகள், 500 ஏகே-47 துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை வாங்கி இலங்கைக்கு அனுப்ப முயன்றதாக இவர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இவர்கள் மீதான வழக்கு விசாரணை அமெரிக்காவின் புரூக்லின் நீதிமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், பிரதீபன் நடராஜாவுக்கு குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ஆகக் கூடியது ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.
சுரேஸ் சிறிஸ்கந்தராஜாவுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படக் கூடும்.
முதல் கட்ட வழக்கு விசாரணை முடிந்துள்ள நிலையில் இவர்களின் பிணை மனு கோரிக்கை எதிர்வரும் 2013ம் ஆண்டு ஜனவரி 9ம் திகதி பரிசீலிக்கப்படவுள்ளது.
தனது கட்சிக்காரரான நடராஜா, கனடாவில் ஒரு கெளரவமான உழைப்பாளி குடும்பத்தை சேர்ந்த மனிதன் எனவும் நீதிமன்றத்தில் தனது பொறுப்பை அவர் நிரூபணம் செய்துள்ளதாகவும் வழக்கறிஞர் சாம் ஏ ஸ்மித் தெரிவித்துள்ளார்.
மற்றுமொரு சந்தேகநபரான சிறிஸ்கந்தராஜா தனது தாயை சந்திக்க வேண்டும் என நீதிமன்றில் அனுமதி கோரிய நிலையில், கனடாவில் இருந்து வந்த தாயை நீதிமன்ற அறையில் வைத்து சந்திக்க அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்த சந்திப்பு தாயின் கண்ணீருடன் சிறிது நேரம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply