கிளிநொச்சி மாவட்டத்தில் கடும் மழை காரணமாக 7,042 பேர் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்துள்ள கடும் மழையாலும் குளங்கள் பெருக்கெடுத்துள்ளதாலும்  1,863 குடும்பங்களைச் சேர்ந்த 7,042 பேர் இதுவரையில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 921 குடும்பங்களைச் சேர்ந்த 3,330 பேர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறிய நிலையில் 22 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தின்  கரைச்சி, கண்டாவளை, பூநகரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரைச்சி பிரசே செயலாளர் பிரிவில் பன்னங்கண்டி, சிவிச்சென்ரர், மருத நகர், அம்பாள் நகர், இரத்தினபுரம்இ தொண்டமான் நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் முரசுமோட்டை, புளியம்பொக்கணை, நாகேந்திரபுரம், தர்மபுரம் கிழக்கு மற்றும் மேற்கு, பெரியகுளம், புண்ணைநீராவி, குமாரசாமிபுரம், பரந்தன், கோரக்கன்கட்டு, ஊரியான், கண்டாவளை, பிரமனந்தனாறு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களும் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் நல்லூர், நாச்சிக்குடா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.

நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள இம்மக்களுக்கு சமைத்த உணவுகள் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலையிலிருந்து மழை ஓய்வடைந்துள்ளதென கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் கு.சுகுணதாஸ் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை இரவுவரை அடை மழை பெய்ததாகவும் அவர் கூறினார்.

மேலும் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிவரையான நிலைவரப்படி கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம் 33 அடி 10.5 அங்குலம்வரை  உயர்வடைந்துள்ளது. இக்குளத்தின் 11 வான்கதவுகளும் திறந்துவிடப்பட்டுள்ள நிலையிலேயேயுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசன பொறியியலாளர் எஸ்.விகிர்தன் தெரிவித்தார்.

இம்மாவட்டத்திலுள்ள ஏனைய குளங்களான அக்கராயன்குளம், கல்மடுக்குளம், பிரமானந்தன்குளம், புதுமுறிப்புக்குளம், கனகாம்பிகைக்குளம், வன்னேரிக்குளம், கரியாலை நாகவடுவான்குளம், குடமுறுட்டி குளம் ஆகிய குளங்கள் தொடர்ந்து வான்பாய்ந்துகொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply