சிவப்பு மழையில் உயிரின கூறுகள்: முதற்கட்ட ஆய்வில் தகவல்
இலங்கையில் அண்மைக்காலமாக பல இடங்களில் பெய்ததாகக் கூறப்படும் சிவப்பு மழையின் துளிகளில் அல்கா வகை உயிரினங்கள் காணப்பட்டதாக அது குறித்து ஆராய்ந்த இலங்கையின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது. இது குறித்து பேசிய அந்த நிறுவனத்தின் தலைமை இயக்குனரான டாக்டர் அனில் சமரநாயக்கா அவர்கள் அவை அல்காக்களின் வகையை சேர்ந்ததாக தாம் அனுமானிக்கின்ற போதிலும் குறிப்பாக அவை எந்த வகையான அல்காக்கள் என்பதை தம்மால் கண்டறிய முடியாது இருப்பதாக கூறுகிறார்.
அந்த ஒரு கல உயிர் அங்கிகள் மிகவும் கடினமான சூழ்நிலையில் கூட உயிவாழ்வனவாக இருப்பதுதடன் பெருக்கமடையும் தன்மையையும் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
இவை குறித்த தமது அனுமானங்களை உறுதி செய்ய அவற்றை டி என் ஏ மற்றும் ஆர் என் ஏ சோதனைகளை செய்ய வேண்டியுள்ளதாகவும் டாக்டர் சமரநாயக்கா கூறினார். இது குறித்து ஏற்கனவே கேரளாவில் பெய்த சிவப்பு மழையை ஆராய்ந்த பிரிட்டனின் கார்டிவ் பல்கலைக்கழகம் ஆராய்ச்சிகளை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இருந்தபோதிலும், அவை மனிதனுக்கு ஏதாவது ஆபத்தை ஏற்படுத்துமா, இல்லையா என்பது குறித்து தாம் இன்னும் கண்டறியவில்லை என்றும் அவர் கூறினார்.
”இதுவரை எவரும் அவற்றினால் இறந்ததாக அல்லது பாதிக்கப்பட்டதாக எமக்கு தகவல்கள் வரவில்லை, அதே நேரத்தில் இந்த அல்காவில் 1000 துணை வகைகள் இருக்கின்றன. அவற்றில் இது எந்த வகையைச் சேர்ந்தது என்பதை நாங்கள் இன்னமும் கண்டுபிடிக்கவில்லை. ஆகவே எமது இறுதி முடிவுகள் வரும்வரை நாம் இவற்றால் பாதிப்பு ஏற்படுமா என்பதை கூறமுடியாது. ஆனால் எவரும் பாதிக்கப்பட்டதாக எமக்கு முறைப்பாடும் இது வரை கிடைக்கவில்லை.” என்றார் டாக்டர் சமர நாயக்கா.
அதேவேளை, இந்த உயிர் அங்கிகள் குறித்த முழுமையான ஆய்வுகள் முடியும் வரை இவை குறித்து எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று மக்களுக்கு எந்தவிதமான அறிவுறுத்தல்களையும் தாம் கூற முடியாது உள்ளதாகவும் அவர் கூறினார்.
”இது எப்படியான உயிர் அங்கி என்பதை முழுமையாக நாங்கள் கண்டறிந்த பின்னர்தான் இந்த சிவப்பு மழை ஏன் உருவாகின்றது, எப்படி உருவாகின்றது என்பன போன்ற விடயங்களையும் கண்டறிய முடியும்” என்றும் டாக்டர் அனில் சமரநாயக்கா தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply