சுய இலாபத்துக்காக நீதித்துறையை பயன்படுத்த சில குழுக்கள் முயற்சி – கோத்தாபய

மக்களை தவறாக வழிநடத்தி தமது சுய நோக்கங்களை அடைந்து கொள்வதற்கு நீதித்துறையை ஒருசிலர் பயன்படுத்த முயற்சிக்கின்றனர். ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்துள்ள இந்நாட்டு மக்கள் இச்சதி முயற்சிகளுக்கு ஒரு போதும் துணைபோக மாட்டார்கள் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பல்வேறு பயங்கரவாத நிலைகளையும், சவால்களையும் முறியடித்து நாடு அபிவிருத்தி நிலையை நோக்கி அடியெடுத்து வைத்திருக்கும் இந்நிலையில் அமைதியையும், அபிவிருத்தியையும் சீர்குலைப்பதை மக்கள் விரும்பக்கூடாது என குருநாகலில் இடம்பெற்ற விவசாய பொருட்காட்சி வைப்பத்தில் பேசும் போது பாதுகாப்பு செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடமேல் மாகாண விவசாய அமைச்சு டி.எஸ். சேனாநாயக்க வித்தியாலயத்தில் நடாத்தும் விவசாய கண்காட்சியின் இரண்டாவது நாள் நிகழ்வு நேற்று முன்தினம் (வியாழன்) நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மேலும் பேசிய அவர்,

எமது நாடு பல கால கட்டங்களில் பயங்கரவாத பிரச்சினைகளை எதிர்கொண்டு வந்துள்ளது. ஆட்சியை தவறான வழியில் கைப்பற்றுவதற்கு முயற்சி செய்வோரும் உள்ளனர். நாடு எதிர்நோக்கிய இவ்வாறான சவால்களின் காரணமாக எமது நாடு பொருளாதார துறையில் பின்தள்ளப்பட்டது. சுதந்திரத்துக்குப் பின்னர் ஏற்பட்ட பல நிகழ்வுகளால் மக்கள் துன்பம் அனுபவிக்க நேர்ந்தது.

இன்றைய அரசு பல்வேறு சவால்களுக்கும் முகம் கொடுத்து நாட்டை அபிவிருத்தி பாதையில் திசை திருப்பி வருகின்றது. இந்நிலையை கெடுத்து தமது சுய இலா பங்களை அடைந்து கொள்வதற்கு பல் வேறு வழியிலும் முயற்சிகளை சில குழுக்கள் மேற்கொண்டு வருகின்றன.

தமது வழியில் தோல்வி கண்டவர்களுக்கு இப்பொழுது நீதித்துறை கிடைத்திருக்கின்றது. ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்துள்ள இந்நாட்டு மக்களை தவறாக திசை திருப்புவதற்கு இவர்கள் பிரயத்தனம் மேற்கொள்கின்றனர்.

அரபு நாடுகளில் இடம்பெறுவது போன்ற பிரச்சினைகளை இங்கு உரு வாக்கி நாட்டை குழப்புவதற்கு எடுக்கும் நடவடிக்கைகள் வெற்றிபெறமாட்டாது. ஜனநாயகத்தினால் கட்டியெழுப்பப்பட்ட இந்நாட்டில் மீண்டும் பயங்கரவாத நிலைக்கு இடமில்லை.

இன்றைய ஜனாதிபதி தலைமையிலான அரசு ஜனநாயகத்திலும் அபிவிருத்தியிலும் நம்பிக்கை வைத்துள்ளது. நாடு முழுவதும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும். அத்துடன் பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வைக் காண வேண்டும் என்பதிலும் நாம் நம்பிக்கை வைத்து உழைக்க வேண்டும்.

இன்றைய அரசு பதவியேற்ற போது நாடு இருந்த நிலைவேறு. துயர் நிறைந்த ஒரு காலகட்டத்தில் அரசு பதவியேற்றது. அப்பொழுது இருந்தும் பல்வேறு குழுக்கள் ஆட்சியை கவிழ்ப்பதற்கு முயற்சி மேற்கொண்டன . இராணுவத்திற்கு கூடுதலான ஆட்கள் சேர்க்கப்படுவதாகவும் குறை கூறினர். ஆனால் அரசு தனது நிலைப்பாட்டில் சென்று நாட்டை பல்வேறு அழிவுகளில் இருந்தும் மீட்டு வந்துள்ளது.

இன்று நீதித்துறையை தமக்கு சாதகமாக பயன்படுத்துவோர் நாளை வேறு துறை களை நாடக்கூடும். எனினும் மக்கள் என்றும் விழிப்புடன் செயற்படுவது அவசியம் என்று கூறினார். இப்பொருட் காட்சி நேற்று 28ம் திகதியுடன் முடிவடைந்தது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply